×

மணமேல்குடி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாணவர்கள் கடும் அவதி ஐஸ் உற்பத்தி தொழிலும் பாதிப்பு

மணமேல்குடி, ஏப்.4: மணமேல்குடி பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதனால் மண்ணெண்ணெய் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கக் கூடிய அவல நிலை ஏற்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்வுக்காக படிக்கக்கூடிய மாணவர்கள் இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சங்களில் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேர மின்வெட்டால் சில வீடுகளில் உள்ள பச்சிளம் குழந்தைகள் மின்விசிறி இயங்காமல் அழுதுகொண்டே இருக்கக்கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள மக்கள் இரவு நேர மின்வெட்டால் சாலையோரம் அமர்ந்து இருக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சில சமயங்களில் பூச்சி கடிக்கு உள்ளாகின்றனர். இதுபோன்று அடிக்கடி ஏற்படும் சில மணி நேர மின் வெட்டுக்களால் சாலையோரம் அமர்ந்திருக்கும்போது சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.

இதுகுறித்து மணமேல்குடியை சேர்ந்த ரேவதி கூறுகையில், “எனது பிள்ளைகள் இரண்டு பேருக்கும் முழு ஆண்டுத் தேர்வு நடந்து வருகிறது. தற்போது பல நாட்களாக இரவு நேரங்களில் திடீர் திடீரென சில மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் பொதுத்தேர்வுக்கு படிப்பதற்காக மண்ணெண்ணெய் விளக்குகளில் வெளிச்சத்தில் படிக்கின்றனர். இதனால் குறைவான வெளிச்சத்தில் படிக்கும்போது மாணவர்களுக்கு பார்வை சம்மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும், தலைவலியும் ஏற்படுகிறது. இதனால் பகல் பொழுதில் தேர்வை சரியாக எழுத முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் அதிகமான ஏழை மற்றும் நடுத்தர மக்களே வாழ்ந்து வருகின்றனர். எங்கள் பகுதிகளில் யார் வீட்டிலும் இன்வெர்ட்டர் வசதி கிடையாது.  இதனால் நாங்கள்  மண்ணெண்ணெய் விளக்குகளை உபயோகப்படுத்துகிறோம். மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் வெளியில் நடமாடவே பயமாக இருக்கிறது. சில சமயங்களில் காலை நேரங்களிலும் மின்வெட்டு ஏற்படுவதால் சமையல் வேலைகளும் பாதிக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் போராட்டம் செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார். இதேபோன்று மணமேல்குடி பகுதிகளில் கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள ஐஸ் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஜெனரேட்டர் மூலம் இயக்குவதால் அதிக பொருட்செலவு ஏற்படுவதுடன் உற்பத்தியில் நஷ்டமும் ஏற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : power plant ,area ,Manamkuldi ,
× RELATED புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி