×

முன்னறிவிப்பு ஏதுமின்றி மயிலாடுதுறை-சீர்காழி தனியார் பஸ்கட்டணம் திடீர் உயர்வு அதிகாரிகள் ஆதரவுடன் நடத்துனர்கள் அடாவடி

மயிலாடுதுறை, ஏப்.4:நாகை மாவட்டம் மயிலாடுதுறை  சீர்காழிக்கு அரசு பேருந்து கட்டண நிர்ணயத்தைவிட கூடுதலாக ரூ.2 மிரட்டி வாங்கும் போக்கால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு ரூ.9 கட்டணமாக இருந்தது. அரசு பேருந்துகள் மட்டும் ரூ.9 வசூல் செய்த நிலையில் தனியார் பேருந்துகள் ரூ.10 என்றே வசூல் செய்து வந்தது.  இந்த நேரத்தில் எடப்பாடி அரசு பேருந்து கட்டணத்தை   சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு ரூ.15 என்று உயர்த்தியது. தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ரூ.15 என்றே டிக்கெட் போட்டு வசூல் செய்தனர். தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் உயர்வு குறித்து போராட்டங்கள் வெடித்தது. இதனால் தமிழக அரசு மீண்டும் பேருந்து கட்டணத்தை தமிழகம் முழுவதும் குறைத்தது.ரூ.15க்குப் பதில் ரூ.13 வசூல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இதைப் பின்பற்றி அரசு பேருந்துகள் ரூ.13 என்றே வசூல் செய்து வருகிறது.  தனியார் பேருந்துகள் அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு ரூ.15 என்றே வசூல் செய்து வருகிறது. மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அனைவரிடமும் ரூ.15 என்றுதான் கட்டணம் வசூல் செய்கின்றனர். கொஞ்சம்கூட அரசுக்கோ அரசு அதிகாரிகளுக்கோ பயப்படாமல் டிக்கெட்டில் ரூ.15 என்றே அச்சடித்து வழங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட டிரிப்புகளில் மயிலாடுதுறை சீர்காழி வழித்தடத்தில் பேருந்துகள் செல்கின்றன. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை பொதுமக்கள் பணம் அரசுக்கும் செல்லாமல் தனியார் பேருந்து உரிமையாளருக்கு செல்கிறது.  

இதுகுறித்து யாராவது பொதுமக்கள் கேட்டால் அவர்களைக் கிண்டல் செய்வதும், ``உன்னால் என்ன முடியுமோ கிழிச்சிக்கோ’’ என்று அடாவடியாக பேசுவதும், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கூறுவோம் என்றால் நீ கலெக்டரிடமே கூறிக்கொள் எங்களை எதுவும் செய்யமுடியாது, இஷ்ட்டம் இருந்தால் இந்த பேருந்தில் ஏறு, இல்லை என்றால் இறங்கி அரசு பேருந்தில் போ என்று கொக்கரிக்கின்றனர், இதைக்கேட்டவர்கள் அவமானப்பட்டு வாயைப்பொத்திக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கடந்த 30ம்தேதி காலை 9.45மணிக்கு சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் ஒரு நபர் தனியார் பேருந்தில் ஏறி அமர்ந்து மயிலாடுதுறைக்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு கம்ப்யூட்டர் ரசீது ரூ.15 என்று அளித்துள்ளார்.  இதைக் கண்ட அந்த நபர் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம்வரை டிக்கெட் கட்டணம் ரூ.13 தானே நீங்கள் எப்படி ரூ.15 என்று வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.  அதற்கு அந்த பேருந்தின் நடத்துனர், அவன் அவன் ரூ.500 ஆயிரம் என்று கொள்ளையடிக்கிறான் அதைபோய் முதல்ல நிறுத்தச்சொல்லு எங்ககிட்ட வந்துட்ட, ரூ.15 கொடுக்கிறியா நடுவழியில இறக்கிவிடவா என்று மிரட்டியுள்ளார். நான் ஒரு பயணி என்னை எப்படி மிரட்டலாம். இதுகுறித்து மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் புகார் கூறுவேன் என்று அந்தப்பயணி கூறியதும், நீ போய் கலெக்டரிடம் சொன்னாலும் எதுவும் செய்ய முடியாது. வேண்டுமானால் என்னை போட்டோ எடுத்துக்கூட அனுப்பு, அப்பவும் என்னையோ எங்கள் நிறுவனத்தையோ எதுவும் செய்ய முடியாது என்று வேகமாகப் பேசி அவமானப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த நபர் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலருக்கு செல்போனில் தொடர்பு கொண்டதற்கு அவர்  செல்போனை எடுக்கவில்லை, உடனே நாகை மாவட்ட கலெக்டருக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து பேருந்து பயணி சீர்காழி துரைராஜ் கூறுகையில், ‘இந்த தனியார் பேருந்துகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகவே இந்த சட்டத்திற்குப் புறம்பான கட்டணத்தை வசூல் செய்துள்ளனர். இதற்கான கணக்கு தனியார் பேருந்து நிறுவனங்களிடம் இருக்கும் உடனடியாக அவற்றை கைப்பற்றி இதுநாள்வரை தனியார் பேருந்துகள் வசூல் செய்த அத்தனைத் தொகையையும் திரும்ப பெற்றும் அவர்கள் தவறு செய்ததற்கான தண்டனையும் வழங்க வேண்டும், திமிர்தனமாக பேசிய தனியார் பேருந்து நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தனியார் பேருந்து நடத்துனர்கள் அத்துமீறி பேசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குத் தெரிந்தே இந்த பேருந்து கட்டணம் உயர்த்தி வாங்கப்படுகிறது, ஆகவே நாகை மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு தவறுசெய்த தனியார் பேருந்து நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உடந்தையாக இருக்கும் மயிலாடுதுறை சீர்காழி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .அவமானப்படும் பயணிகள் டிக்கெட் கட்டணம் உயர்த்தியது குறித்து பொதுமக்கள் கேட்டால் அவர்களைக் கிண்டல் செய்வதும், ``உன்னால் என்ன முடியுமோ கிழிச்சிக்கோ’’ என்று அடாவடியாக பேசுவதும், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கூறுவோம் என்றால் நீ கலெக்டரிடமே கூறிக்கொள் எங்களை எதுவும் செய்யமுடியாது, இஷ்டம் இருந்தால் இந்த பேருந்தில் ஏறு, இல்லை என்றால் இறங்கி அரசு பேருந்தில் போ என்று கொக்கரிக்கின்றனர், இதைக்கேட்டவர்கள் அவமானப்பட்டு வாயைப்பொத்திக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

Tags : Conductors ,Mayiladuthurai-Sirkazhi ,
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...