×

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.37 லட்சம் மதிப்பு நிலம் அபகரிப்பு: டாக்டர், மகனுடன் கைது

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த பெண் மாசிலாமணி (46) ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: காரைக்குடியை சேர்ந்த நான், கடந்த 1991ம் ஆண்டு கணவர் பாண்டிச்சாமியுடன் சென்னையில் குடியேறினேன். எங்களுக்கு மாங்காட்டில் 2053 சதுர அடி நிலம் உள்ளது. சாலிகிராமம் பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் அவரது தந்தை டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் எங்களை சந்தித்தனர். அப்போது, எங்கள் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்யலாம் என்றும் கட்டிடம் கட்டிய பிறகு இருவரும் சமமாக பிரித்து கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பி, எங்கள் நிலத்திற்கான பொது அதிகாரம் பத்திரத்தில் கையெழுத்து போட்டோம். பின்னர் எங்களிடம் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தனர். ஒரு மாதம் கழித்து எங்கள் சொத்தை நவீன் அவரது தந்தை சுப்பிரமணியன் பெயரில் மாற்றி எழுதிக்கொண்டனர்.

மேலும் எங்கள் நிலத்தின் பத்திரத்தையும் மற்றொரு நிலத்தின் பத்திரத்தையும் இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து ரூ.68 லட்சம் பணத்தை பெற்றுள்ளனர். தகவலறிந்து நாங்கள் நவீன் மற்றும் அவரது தந்தையிடம் கேட்டபோது, நிலத்திற்கு உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து சொத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரித்தபோது நவீன் மற்றும் அவரது தந்தை டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மோசடியாக மாசிலாமணிக்கு சொந்தமான ரூ.37 லட்சம் மதிப்புள்ள இடத்தை அபகரித்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் நவீன் ஆகியோரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Tags : doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...