×

வனத்துறையின் அலட்சியத்தால் பூண்டி காப்புக்காட்டில் கடும் வறட்சி தண்ணீர் தேடி அலையும் விலங்குகள்

திருவள்ளூர், ஏப். 4: பூண்டி காப்புக்காட்டில் கடும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் தூர்ந்து கிடக்கிறது. வன விலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் படையெடுப்பதால் விபத்துக்குள் ஏற்படுகிறது. இதை தடுக்கவும் மழைநீரை சேமிக்கவும் வனப்பகுதிக்குள் குட்டைகள் வெட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, நெய்வேலி, சதுரங்கப்பேட்டை, அரும்பாக்கம், ரங்காபுரம், திருப்பாக்கம், சென்றாயன்பாளையம், நம்பாக்கம், அரியத்தூர், சீதாபுரம், புல்லரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அரசுக்கு சொந்தமான காப்புக் காடு உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த காப்புக் காடு உள்ளது. இங்கு, மான், குள்ளநரி, முள்ளம்பன்றி, முயல், காட்டுபன்றி, உடும்பு ஆகிய விலங்குகள் உள்ளன. இவைகளுக்கு போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் கோடை காலத்தில் கடும் அவதிப்பட்டு வருகின்றன.
இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் வனத்துறையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர். இதற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்துவதால், வனப்பகுதியில் வாழும் விலங்குகளின் அழிவுக்கு இவைகள் காரணமாக உள்ளது. மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் வனப்பகுதியில் குட்டைகள் வெட்டப்படுவது வழக்கம். இவை பல இடங்களில் தூர்ந்துபோய் உள்ளன. இக்குட்டைகளுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் காணாமல் போய்விட்டது. இதனால் காப்புக் காட்டில் உள்ள விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமங்களை நோக்கி மான்கள் படையெடுக்கிறது. அப்போது விபத்தில் சிக்குவதும் உண்டு.

கடந்த மூன்று ஆண்டுகளில்  மட்டும் கோடை வெயிலில், தண்ணீர் தேடி புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு  வீட்டிற்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சென்றனர். இதேபோல்  காப்புக் காட்டில் இருந்து தப்பி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்  சுற்றி திரிந்த இரண்டு புள்ளி மான்களை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கொசவன்பாளையம்  கிராமத்திற்குள் புகுந்த புள்ளி மான் ஒன்று வேலியில் சிக்கி பலியான  சம்பவமும், போளிவாக்கம் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் ஒன்று பலியான  சம்பவமும் நடந்துள்ளது. இதேபோல், மணவாளநகர், வேப்பம்பட்டு பகுதிகளில்  மான்கள் சுற்றித் திரிந்து, பொதுமக்களை கண்டதும் தப்பிய சம்பவம்  நடந்துள்ளது.எனவே, பூண்டி காப்புக் காட்டில் உள்ள விலங்குகள், பறவைகளைக் காப்பாற்ற, உணவு, தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும். ஆங்காங்கே வனப்பகுதியில் தண்ணீரை தேக்கிவைக்கும் வகையில் குட்டைகள் வெட்டப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மரம் கடத்துவதை கண்காணிக்க கேமரா
வனத்துறையினர் கூறுகையில், பூண்டி காப்புக் காட்டில் வளர்ந்துள்ள செம்மரங்களை, சிலர் திருட்டுத்தனமாக வெட்டி கடத்திச் செல்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து பலரை கைது செய்துள்ளோம். இருப்பினும், அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மர்ம நபர்கள் புகுந்து செம்மரங்களை வெட்டி கடத்துகின்றனர். இதையடுத்து, காப்பு காட்டில் வளர்ந்துள்ள செம்மரங்களை கண்காணிக்க, உயர் கோபுரம் அமைத்து, சோலார் மின்தகடு மூலம் இயங்கும் மூன்று காமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அனுமதியின்றி காட்டுக்குள் நுழைந்து, செம்மரங்களை கடத்த நினைக்கும் சமூக விரோதிகளை பிடிக்க முடியும் என தெரிவித்தனர்.

Tags : backyard ,Forest Department ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...