×

13 சோதனை சாவடிகளில் 52 சிசிடிவி கேமரா

ஈரோடு, ஏப்.3: மக்களவை தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 52 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் கூறினார். மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் போலீஸ் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஸ்பி சக்திகணேசன் கூறுகையில், `மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பண்ணாரி சோதனை சாவடி, கோபி-சத்தி சாலையில் உள்ள கோவை பிரிவு சோதனை சாவடி, கருங்கல்பாளையம் சோதனை சாவடி, தானா புதூர், உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஒவ்வொரு சோதனை சாவடியிலும் 5 மெகா பிக்சல் கொண்ட தலா 4 சிசிடிவி கேமரா என 52 கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனை சாவடிகளிலும் நடக்கும் அனைத்து சம்பவங்களும் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை