×

கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு

கெங்கவல்லி, ஏப்.3: மணல் கடத்திய 2 டிப்பர் லாரிகளை போலீசார் விடுவித்தால், ஆவேசமடைந்த நபர் கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கெங்கவல்லி வலசக்கல்பட்டி அருகே மால்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் 2 டிப்பர் லாரியில் செம்மண் கடத்தி சென்றனர். இதுகுறித்து ஜெயசங்கர் என்பவர் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், எஸ்ஐ கோபி விரைந்து சென்ற வலசக்கல்பட்டி பிரிவு ரோட்டில் 2 டிப்பர் லாரிகளையும் மடக்கி பிடித்து கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார். பின்னர், நடத்திய விசாரணையில் வீரகனூர் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ், ராமு ஆகியோர் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆனால், சேலம் மாவட்ட கனிம வளம் இயக்குனர் அலுவலகத்தில் மால்பள்ளி முதல் கூலமேடு வரை மண் அள்ளி கொட்ட அனுமதி பெற்றுள்ளது தெரிய வந்தது. இதன்பேரில், 2 டிப்பர் லாரிகளை எஸ்ஐ கோபி விடுவித்தார்.

இதனை அறிந்த ஜெயசங்கர் கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கடும் வாக்குவாதம் செய்தார். அப்போது, போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறி மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு கெங்கவல்லி தாசில்தார் அலுவலகம் முன் ஜெயசங்கர் தீ குளிக்க முயன்றார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தடுத்தனர். அப்போது, புகார் குறித்து போலீசார் முறையாக விசாரிக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக ஜெயசங்கர் தெரிவித்தார். இதுசம்பந்தமாக தாசில்தார் சுந்தராஜனிடம் கேட்டபோது, உரிய அனுமதி பெற்றே மண் அள்ளி செல்கின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி மீண்டும் லாரியை விடுவித்தனர். ஆனால், ஜெயசங்கர் வேண்டும் என்றே தீக்குளிக்க முயன்றார். இனி இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Kangavalli ,
× RELATED கெங்கவல்லி அருகே விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சரண்