×

போலீசார் கடுமையாக நடப்பதாக கூறி போலீஸ் ஸ்டேஷன் முன் திருநங்கைகள் மறியல்

சேலம், ஏப்.3:  சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் போலீசார் கடுமையாக நடப்பதாக கூறி பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு திருநங்கைகள் மறியல் போராட்டம் நடத்தினர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இரவு 7 மணிக்கு பின் ஆங்காங்கே திருநங்கைகள் நின்றுகொண்டு, அங்கு வரும் வெளியூரை சேர்ந்தோர்களை தனியாக அழைத்துச் சென்று, பணம் பறிப்பில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. கடந்த வாரத்தில், வாலிபரை அழைத்துச் சென்ற திருநங்கை ராஜேஸ்வரி என்பவர், அவரிடம் இருந்து ₹15 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டார். இதுபற்றி பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் விசாரணை நடத்தி, திருநங்கை ராஜேஸ்வரியை கைது செய்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் பணம் பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு திருநங்கையையும் போலீசார் கைது செய்தனர்.


இந்நிலையில் நேற்றிரவு, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சேலம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவர் பூஜா, செயலாளர் கோபிகா, பொருளாளர் ரசிகா ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரண்டு வந்தனர். அவர்கள், ஸ்டேஷனை முற்றுகையிட்டு, புதிய பஸ் ஸ்டாண்டில் நிற்கும் திருநங்கைகளிடம் போலீசார் கெடுபிடி காட்டக்கூடாது என்றும், தங்களை அசிங்கமாக பேசக்கூடாது என்றும் கூறி முறையிட்டனர். இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்ய புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அனுமதிக்க முடியாது.

யார் அந்த தொழிலில் ஈடுபட்டாலும்,பயணிகளை தனியாக அழைத்துச் சென்று பண பறிப்பில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார். அதற்கு திருநங்கைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர்,ஸ்டேஷன் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, தங்களை கருணை கொலை செய்யுங்கள் எனக்கூறி தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கைது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகினர். அப்போது,உதவி கமிஷனர் செல்வராஜ் வந்து பேச்சு நடத்தினார். அவரின் கால்களை பிடித்துக் கொண்டு திருநங்கைகள் கதறினர். இனி போலீசார் அநாகரிகமாக பேச மாட்டார்கள் எனக்கூறி அவர் சமாதானம் செய்தார். பின்னர்,மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் கலைந்துசென்றனர். உயர் அதிகாரிகள் முறையாக ஒத்துழைப்பு வழங்காததால், ஸ்டேஷன் போலீசார் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

Tags : police station ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்