×

பாப்பாரப்பட்டி பகுதியில் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தர்மபுரி, ஏப்.3: பாப்பாரப்பட்டி பகுதியில் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிலோ ஒன்றிற்கு ₹150 வரை விற்பனையாகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சாமை, தினை, சோளம், கம்பு, நிலக்கடலை, கேழ்வரகு போன்ற மானாவாரி பயிர்கள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர். இதை தவிர நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி, காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி  பகுதியிலிருந்து கடகத்தூர், செல்லியம்பட்டி உள்ளிட்ட பாலக்கோடு வரையிலான இடங்களில் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர்.
   
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முருங்கை ரகம் அதிக உயரம் வளராமல் இருக்க செடியை கிள்ளி விட்டுக் கொண்டே வர வேண்டும். அப்போது மெயின் தண்டில் கிளைகள் விட தொடங்கும் போது மரம் உயரமாக வளராமல் கிளைகள் பரவ ஆரம்பிக்கும். இதற்கு தேவையான தண்ணீரை சொட்டுநீர்ப் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. பொதுவாக ஏப்ரலிலிருந்து ஆகஸ்டு மாதத்திற்குள் முருங்கை அறுவடை நடைபெறுகிறது. தற்போது, செப்டம்பர் மாதத்திலும் காய்கள் கிடைக்கிறது. தற்போது முருங்கை சீசன் துவங்கியுள்ளது. தினமும் 10 கிலோ முதல் 20 கிலோ வரையில் காய்களை பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். ஒரு கிலோ ₹50 முதல் அதிகபட்சமாக ₹150 வரை விற்பனையாகிறது என்றனர்.

Tags : Murugai ,area ,Paparapatti ,
× RELATED பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை