×

ஜிப்மரில் பச்சிளங்குழந்தைகள் மருத்துவ ஆய்வு பயிலரங்கம்

புதுச்சேரி, ஏப். 3:  புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ ஆய்வு குறித்த பயிலரங்கம் நடந்தது. ஜிப்மர் பச்சிளம் குழந்தைகள் நலத்துறை, வேலூர் சிஎம்சி மற்றும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைகளுடன் இணைந்து இப்பயிலரங்கை நடத்தின. முதல் நாளில் 3 முக்கிய பயிலரங்குகள் நடந்தது. தாய்ப்பால் மேலாண்மை மற்றும் தாய்ப்பால் வங்கி செயல்பாடு, மூச்சுத்திணறல் கண்ட பச்சிளங்குழந்தைகளுக்கு அவசரகால மருத்துவ உதவி மற்றும் மூளை பாதித்த குழந்தைகளுக்கு குளிரூட்டல் மருத்துவம் குறித்து பயிலரங்குகள் நடைபெற்றது. இதில் செவிலியர்களும், மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.

பயிலரங்கில் இந்தியா முழுவதும் இருந்து பங்கேற்ற இளம் மருத்துவ மாணவர்கள், பச்சிளங்குழந்தை நலம் பற்றிய 50 ஆய்வுக்கட்டுரைகளை பகிர்ந்து கொண்டனர். ஜிப்மர் முன்னாள் இயக்குனர் விஷ்ணுபட் பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார். பயிலரங்கை ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால் தொடங்கி வைத்தார். புதுடெல்லி எய்ம்ஸ் குழந்தை நலத்துறை தலைவர் அசோக் டியோராரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே, பச்சிளங்குழந்தைகள் நலத்துறை தலைவர் ஆதிசிவம் ஆகியோரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஜிப்மர் பச்சிளங்குழந்தை துறை பேராசிரியர்கள், இளநிலை மருத்துவர்கள் செய்திருந்தனர்.

Tags : study workshops ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...