×

முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காட்டில் 5மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை அதிகாரிகள் சமரசம்

முத்துப்பேட்டை ஏப்.3:முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு, புதுக்குடி பகுதியில் கஜா புயலுக்கு பிறகு 5மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டியக்காடு, முனங்காடு, மேலக்காடு, மேலதொண்டியக்காடு, புதுக்குடி உட்பட பல்வேறு உட் கிராமங்களுக்கு  கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கடந்த நவம்பர் 15ம்தேதி ஏற்பட்ட கஜா புயலுக்கு பிறகு மேற்க்கண்ட பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குழாய் சேதமாகி சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் புதுக்குடி பகுதியில் புயலுக்கு பிறகும் 5மாதங்களாக குடிநீர்  இப்பகுதிக்கு வழங்கவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் நடவடிக்கை இல்லை. இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் அப்பகுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்; ரவிசந்திரன், மகளிர் குழு தலைவி கற்பகம் ஆகியோர் தலைமையில் பெண்கள், ஆண்கள் சுமார் 100பேர்  நேற்று முத்துப்பேட்டை ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் கீழஅமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதற்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன்,  இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன், விசி ஒன்றிய செயலாளர்  மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், உடன் குடிநீர் வழங்கவேண்டும், அப்பகுதி குடிநீர் குழாய் இயக்கும் பணியாளரை இடம் மாற்றம் செய்யவேண்டும்,  ஊராட்சி செயலரை இடம் மாற்றம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் திடீர் போராட்டம் நடத்தியதால்  அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது, இதையடுத்து  அங்கு வந்த முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி போராட்ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இந்த பகுதியில் கஜா புயலின் போது குடிநீர் குழாய் சேதமானதையடுத்து புதிய குழாய் அமைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ. 12.50லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி விரைவில் துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பின்னர் சுமார்  2மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து
கலைந்து சென்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர்  பாலசுப்பிரமணியம் கூறுகையில் சீரமைப்பு பணி  துவங்கி முடியும் வரை உடன் அப்பகுதி மக்களுக்கு குடிநேர டேங்கர்லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் அப்படி வழங்காத பட்சத்தில் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags : siege officers ,Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...