×

மக்களவை தேர்தலில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கான தபால் ஓட்டு படிவங்கள் அனுப்பும் பணி துவக்கம்

பெரம்பலூர், ஏப். 3: பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கான தபால் ஓட்டு படிவங்கள் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சாந்தா ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல்வேறு வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், ஏனைய துணை ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தேர்தலில் வாக்களிக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்மூலம் தங்களுடைய பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நேரடியாக வந்து வாக்களிக்க இயலாமல் தேர்தல் பணியாற்றுபவர்கள் தபால் மூலம் தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றலாம்.

இதன் அடிப்படையில் பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பணியாற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கான தபால் ஓட்டு படிவங்கள் அனுப்பும் பணி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 5 ஆயிரம் என மொத்தம் 30 ஆயிரம் தபால் ஓட்டு படிவங்களை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் நேற்று துவங்கியது. அதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓவுமான விஸ்வநாதன், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மஞ்சுளா மற்றும் உதவி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : government officials ,election ,Lok Sabha ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...