×

தஞ்சையில் பர்மிட் இல்லாமல் இயங்கிய மினிபஸ்: நேர காப்பாளரை தாக்க முயற்சி

தஞ்சை, ஏப். 3: தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து பர்மிட் இல்லாமல் இயங்கிய மினிபஸ்சை நிறுத்திய நேர காப்பாளரை தாக்க முயற்சி செய்த அதிமுகவை சேர்ந்தவரை கண்டித்து பேருந்துகளை இயக்காமல் டிரைவர்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து மருத்துவக்கல்லூரி, புதிய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் உள்ளே இருந்து மினி பஸ்கள் இயக்குவதற்கு பர்மிட் இல்லை. ஆனால் சில மினி பஸ்கள், தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்கிறது.  ஒரு வழித்தடத்தில் செல்வதற்கு அனுமதி பெற்று கொண்டு பயணிகள் கூட்டம் எந்த வழித்தடத்தில் இருக்கிறதோ அந்த வழித்தடத்தில் மினி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதும் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டின் உள்ளே வந்த மினி பஸ், மருத்துவக்கல்லூரி செல்வதற்காக காத்திருந்த பயணிகளை ஏற்றி கொண்டு செல்ல முயன்றது. இதை பார்த்த நேர காப்பாளர் ஆரோக்கியராஜ், அந்த மினிபஸ்சை நிறுத்தி தஞ்சை மருத்துவக்கல்லூரி செல்வதற்கு பர்மிட் இல்லை. ஆனால் எப்படி இந்த வழித்தடத்தில் பஸ்சை இயக்க முடியும். எனவே பயணிகளை கீழே இறக்கி விட்டு செல்ல வேண்டும். இனி வரும்போது பர்மிட் எடுத்து வந்து காண்பித்து ஒப்புதல் பெற்று செல்ல வேண்டும் என்றார்.

உடனடியாக அந்த மினி பஸ் டிரைவர், தனது உரிமையாளருக்கு செல்போன் வாயிலாக தகவல் கொடுத்தார். உடனே மினி பஸ் உரிமையாளர், தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டுக்கு காரில் வந்தார். பின்னர் நேர காப்பாளரை அழைத்து நான் ஆளும்கட்சியை சேர்ந்தவர். ஆளும்கட்சியின் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என்று எல்லோரையும் எனக்கு தெரியும். அப்படியிருக்கும்போது என்னிடமே பர்மிட் கேட்கிறாயா, பர்மிட் இல்லாமல் மினிபஸ்சை இயக்கினால் என்ன செய்வாய் என்று கேட்டு நேர காப்பாளர் ஆரோக்கியராஜை தாக்க முயன்றார். இதை பார்த்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து டவுன் பேருந்துகளை பஸ்ஸ்டாண்டின் உள்ளே குறுக்கே போட்டு ஆளும்கட்சிகாரர் வந்த காரை மறித்தனர். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கும், போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்ட மேலாளர் சேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆளும்கட்சிகாரரை அழைத்து விசாரணை செய்தபோது தஞ்சை மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொண்டு வந்த பர்மிட் நகலை வாங்கி பார்த்தனர். பர்மிட் நகலில் உள்ளபடி குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பஸ்ஸ்டாண்ட் உள்ளே மினி பஸ்சை கொண்டு வந்து இயக்க வேண்டுமென எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் பொதுமக்களிடம் கத்தியை...