×

கும்பகோணத்தில் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் வாக்கு கேட்டு வர வேண்டாம் வீடுகளின் முன் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு

கும்பகோணம், ஏப். 3: பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் வாக்கு கேட்டு வர வேண்டாம் என்று கும்பகோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் உள்ள வீடுகளின் முன் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜ, தேமுதிக, பாமக மற்றும் சில கட்சிகள் கூட்டணி ேசர்ந்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கருப்பூர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கோ பேக் என்ற தலைப்பிட்டு பாசிச பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த ஒரு கட்சியும் வாக்கு கேட்டு வர வேண்டாம், இவன் வீட்டின் உரிமையாளர் என்று வெள்ளை தாளில் அச்சிட்டு அனைத்து வீடுகளின் முன்புறம் ஒட்டப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அப்பகுதிகளுக்கு சென்று வீட்டின் முன்புறம் இருந்த ஒட்டியிருந்த துண்டு பிரசுரத்தை கிழித்து எரிந்தனர். மேலும் அங்குள்ள வீட்டின் உரிமையாளர்களிடம் இதுபோல் ஒட்டக்கூடாது என்று எச்சரித்தனர்.இதுகுறித்து இஸ்லாமியர் ஒருவர் கூறுகையில், பாஜவுடன் கூட்டணி வைத்து கொண்டு அதிமுக, எங்களை போன்ற சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது. மக்களவை தேர்தலுக்காக வாக்கு கேட்டு இப்பகுதிக்கு வந்தால் பிரச்னை உருவாகும். எங்களது எதிர்ப்பை பாஜ கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக வீடுகளின் முன் நோட்டீஸ் ஒட்டினோம். மக்களவை தேர்தலில் அனைத்து இஸ்லாமியர்களும் பாஜவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றார்.


Tags : parties ,alliance ,Bhajan ,Kumbakonam ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...