×

பிடித்தம் செய்த இபிஎப், இஎஸ்ஐ தொகையை வழங்ககோரி சிஐடியூ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தஞ்சை, ஏப். 3: மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இபிஎப் மற்றும் இஎஸ்ஐ தொகையை பேச்சுவார்த்தையில் ஒத்து கொண்டபடி உடனே வழங்ககோரி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சிஐடியூ ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு தலைமை வகித்தார். மாவட்ட ஜெயபால், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறுகையில், தஞ்சை மாநகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்குழாய் கிணறு மின் மோட்டார் இயக்கும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் 2013ம் ஆண்டு முதல் பிடித்தம் செய்த இபிஎப், இஎஸ்ஐ தொகையை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம், இபிஎப், இஎஸ்ஐ ஆகியவற்றில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தகாரர்களுக்கு துணைபோகும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ கேட்டதற்காக பணிநீக்கம் செய்துள்ள தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென கடந்த மார்ச் 12ம் தேதி, மாநகராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி பொறியாளர் ராஜகுமாரன் தலைமையில் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கடந்தாண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் தலா ரூ.18 ஆயிரத்தை மார்ச் 27ம் தேதிக்குள் வழங்கப்படும்.

இபிஎப், இஎஸ்ஐ தொகை ஏப்ரல் 28ம் தேதிக்குள் ஒப்பந்ததாரரின் பங்கு தொகையுடன் சேர்த்து செலுத்தியதற்கான ஒப்புதல் ரசீது மற்றும் கணக்கு எண் கொடுத்து விடுவதாக ஒப்பந்தகாரர் சார்பில் தெரிவித்தனர். ஆனால் இதுவரை 3 மாதத்துக்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கவில்லை. எனவே பேச்சுவார்த்தையில் ஒத்து கொண்டவாறு 3 மாத கால சம்பளத்தை வழங்க வேண்டும் என்றனர். இந்த தகவல் அறிந்ததும் மேற்கு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்தகாரர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது இன்று (3ம் தேதி)க்குள் பேச்சுவார்த்தையில் ஒத்து கொண்டபடி சம்பளம் தருவதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அப்போது சம்பளத்தை இன்று (3ம் தேதி) தரவில்லை என்றால் ஒப்பந்தகாரர் வீடு மற்றும் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை ஒரே நேரத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

Tags : CIPE ,EPF ,ESI ,
× RELATED இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை...