×

பூண்டி ஏரியில் முழு கொள்ளளவு நீர் சேமிப்பதில் சிக்கல்

திருவள்ளூர், ஏப். 3: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான, பூண்டி ஏரியின் ஒருபுறம் மணல் மேடாக உள்ளதால், முழு கொள்ளளவு நீரை சேமிக்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதை தூர்வாரி அகற்றினால் மேலும், மழைநீரை சேமிக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.பூண்டி ஏரி என்ற சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சென்னை நகர மக்களின், குடிநீர்த் தேவைக்காக, சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால், 1944ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டித் திறக்கப்பட்டது.இந்நீர்த்தேக்கம் சென்னையிலிருந்து, 60 கி.மீ., தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. தமிழக, ஆந்திர மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 1983ஆம் ஆண்டு தெலுங்கு கங்கைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும், 12 டிஎம்சி நீரை, தமிழகத்திற்கு ஆந்திர மாநிலம் வழங்க வேண்டும். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து சோமசீலா, கண்டலேறு அணை வழியாக, 406 கி.மீ., தொலைவு திறந்தவெளி கால்வாயில் பயணித்து கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைகிறது.பின்பு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, ‘’ஜீரோ பாயின்ட்’’ என்ற இடத்திலிருந்து, பூண்டி ஏரிக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல, 25 கி.மீ., தூரத்திகுக் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. பூண்டி அணையின் உயரம் 35 அடி. அணையின் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி, ஏரியின் பரப்பளவு 121 சதுர கிலோ மீட்டர்.

மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய், லிங்க் கால்வாய்களின் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த ஏரியை வெட்ட 10 கிராமங்களில் இருந்த மக்களை வெளியேற்றி, வேறு இடங்களுக்குக் குடியமர்த்தப்பட்டனர். சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக முதலில் கட்டப்பட்டது இந்த நீர்தேக்கம் தான். அதன் பின் தான், புழல், சோழவரம் ஏரிகள் சென்னையின் குடிநீர் தேவைக்காக மாற்றப்பட்டன. பூண்டி நீர்தேக்கத்தை பராமரிக்க, பொதுப்பணித் துறை அலுவலகம் அருகிலேயே உள்ளது. உயர் அதிகாரிகள் தங்குவதற்காக, இங்கு விருந்தினர் மாளிகை உள்ளது. இவ்வாறு பொதுப்பணித்துறை அலுவலகம், விருந்தினர் மாளிகை என அனைத்தும் இருந்தும், ஏரியை அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் கனமழை பெய்தும், கொழுந்தலூர் பகுதியில் ஏரிக்குள் இருந்த மரங்களை வெட்டி மேடான பகுதியை தூர்வாராமல் விட்டதால், அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் கிடந்தது. இதனால், ஏரியானது கனமழையால் முழு கொள்ளளவை எட்டியும், ஏரியின் மறுபுறம் தண்ணீரை சேமிக்க இயலாத அவலநிலை ஏற்பட்டது. தற்போதும் அப்பகுதியை தூர்வாராமல் விட்டுவிட்டதால் மண் மேடாக காட்சியளிக்கிறது. அங்கு, ஏரியானது பாலைவனம்போல காட்சியளிக்கிறது. இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி, ஏரியின் முழு கொள்ளளவு நீர், இருப்பு உள்ளதா என்பது கேள்விக் குறியாக உள்ளது.எனவே, பூண்டி ஏரியில் மேடான பகுதியை தூர்வாரி சரியான அளவு மழைநீரை சேமிக்க இனியாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Pondi Lake ,
× RELATED ஆந்திரா - கண்டலேறு அணையில் இருந்து...