×

வேளச்சேரி-கடற்கரை மார்க்கத்தில் தாமதமாக இயக்கப்படும் பறக்கும் ரயில்கள்: பயணிகள் கடும் அவதி

சென்னை: வேளச்சேரி - கடற்கரை மார்க்கத்தில் திடீர் திடீரென பறக்கும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. நேற்று காலையும் அறிவிப்பேதும் இல்லாமல் தாமதமாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும்  திண்டாடினர். சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை பலரும் குறைத்து வருகின்றனர். அதேபோல் மாநகர பஸ்களிலும் செல்லும் ேபாது,  தாமதம் ஏற்படுவதாக கருதி பலரும் பறக்கும் ரயிலை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.  இதில் வேளச்சேரி - கடற்கரை மார்க்கம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதன் வழியாக தினசரி ஏராளமான பறக்கும் ரயில்கள்  இயக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழித்தடத்தை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், கல்லூரி, பள்ளி போன்றவை உள்ளன. இதனால் ஏராளமானோர் பறக்கும் ரயில் மார்க்கத்தை பயன்படுத்தி  வருகின்றனர்.  இவ்வாறு இயக்கப்படும் ரயில்கள் பகல், இரவு நேரங்களில் அறிவிப்பு ஏதும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ரயிலை நம்பி வரும் பயணிகள் குறித்த நேரத்தில் அலுவலகம், வீடு செல்ல  முடியாமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், நேற்று வேளச்சேரி - கடற்கரை மார்க்கத்தில் காலை 10.40 மணியில் இருந்து 11.30 மணி வரை ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் இந்த வழித்தடங்களில் உள்ள  அனைத்து ஸ்டேஷன்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.  ரயில் திடீரென இயக்கப்படாததற்கு  தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags : Travelers ,route ,Velachery-Beach ,Passengers ,
× RELATED கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து:...