×

கட்சி வழங்கிய நிதியை நகர செயலாளர் அபேஸ்? அதிமுக பிரசார கூட்டங்களை புறக்கணிக்கும் தொண்டர்கள்: சரமாரி குற்றச்சாட்டு

தாம்பரம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு கட்சினர் அவர்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மும்முரமாக பிரசாரம் செய்து ஒட்டு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பெரும்புதூர் நாடாளுமன்ற  தொகுதி பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி காட்சிகளின் தொண்டர்கள் தினமும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தாம்பரம் பகுதியில் மட்டும் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக தொண்டர்கள் நாளுக்குநாள் படிப்படியாக குறைத்து கொண்டே வருகின்றனர். காரணம், மேலிடத்தில் இருந்து தேர்தல் பிரசார ஏற்பாடுகளுக்காக கொடுக்கப்படும்  பணத்தை தாம்பரம் நகர அதிமுக செயலாளர் கூத்தன், நகர அம்மா பேரவை செயலாளர் கோபி, மாவட்ட பிரதிநிதி பரசுராமன் ஆகியோர் கூட்டு சேர்ந்து அபேஸ் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு தண்ணீர், சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுப்பதில்லை, என கூறப்படுகிறது. பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு கட்சி கொடிகள் வாங்கிக்கொடுக்காமல்  வீட்டில் பழைய கொடிகள் இருந்தால் கொண்டுவந்து பிரசாரத்தில் ஈடுபடுங்கள் என்று, பிரசாரத்திற்கு 35 கொடிகள் மட்டும் இருந்தால் போதும் என அவர் தெரிவித்துவிட்டதால் நாளுக்குநாள் தேர்தல் பிரசாரத்திற்கு அதிமுக  தொண்டர்கள் வருகை குறைந்துகொண்டே வருகின்றது.

கடந்த 31ம் தேதி வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தபோது மிகவும் குறைவாகவே அதிமுக கொடிகள் இருந்ததால் கூட்டணி கட்சியினர் அதிருப்தி  அடைந்தனர்.இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் சிலர் கூறியதாவது:பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தீவிர பிரசாரம் மற்றும் ஒட்டு சேகரிப்பில் ஈடுபடவேண்டும் என அதிமுக மேலிடத்தில் இருந்து அறிவித்துள்ளனர்.  ஆனால், தாம்பரத்தில் தேர்தல் பிரசார ஏற்பாடுகளுக்காக நியமன செய்யப்பட்டுள்ள அதிமுக நகர செயலாளர் கூத்தன், நகர அம்மா பேரவை செயலாளர் கோபி, மாவட்ட பிரதிநிதி பரசுராமன் ஆகியோர் பிரசாரத்திற்காக  மேலிடத்தில் இருந்து கொடுக்கப்படும் பணத்தை அபேஸ் செய்து கொள்கின்றனர்.

எங்களுக்கு தண்ணீர், சாப்பாடு என எந்த வசதியும் செய்து கொடுக்காமலும், கட்சி கொடிகளை கூட எங்களுக்கு வாங்கிக் கொடுக்காமல் வீட்டில் பழைய கொடி இருந்தால் எடுத்துக்கொண்டு வாருங்கள் என சொல்லுகின்றனர்.  இதுபோன்று இவர்கள் எதுவும் செய்துகொடுக்காமல் இருக்க நங்கள் ஏன் தினமும் இந்த வெயிலில் வந்து கஷ்டப்படவேண்டும்.  இவர்கள் இதுபோல செய்துகொண்டு வருவதால் தான் நாளுக்குநாள் பிரசாரத்திற்கு வரும்  தொண்டர்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றனர். இதே நிலை நீடித்தால் தேர்தல் தேதி வருவதற்குள் தாம்பரத்தில் அதிமுக சார்பில் பிரசாரத்தில் கலந்துகொள்ள தொண்டர்களே இல்லாத சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Abbas ,party ,Volunteers ,campaigns ,AIADMK ,
× RELATED கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது