×

முத்துப்பேட்டை அருகே மீனவர் குடியிருப்பு பகுதியில் படகுகளில் சென்று 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு

முத்துப்பேட்டை, மார்ச் 29: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தில் உள்ள மீனவ குடியிருப்பு பகுதி மீனவர்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் படகுகளில் சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். திருவாரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் கூடும் இடங்களில் வாக்காளர்களுக்கு வழங்குதல், பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, தொடர்நடை பேரணி, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் ஊராட்சிகளில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பது, ரங்கோலி கோலம் இடுதல், பெண் வாக்காளர்கள் கைகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மெகந்தி இடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

   அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தில் மீனவர்கள் குடியிருப்பு பகுதிகளில் மீனவர்களின் படகுகளில் சென்று  மீனவ வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மகளிர் திட்ட இயக்குநர் லேகா தமிழ்செல்வன் தலைமையில் அலுவலர்கள் மகளிர் குழுவினர் மற்றும் பலர் அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் ஏப்ரல் 18ம் தேதி தவறாது வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியும் நடந்தது
 இதில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபு, வட்ட வழங்கல் அலுவலர் ராஜாமணி, முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்ஐ விஜய்கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : fisherman ,residence ,Muthupettai ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...