×

தேர்தல் பணி பயிற்சியில் விடுபட்ட ஆசிரியர்கள் பெயர் பதிவு செய்யலாம்

ஈரோடு, மார்ச் 29: தேர்தல் பணிக்கான முதல்கட்ட பயிற்சியில் விடுபட்ட ஆசிரியர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி வாக்குபதிவு நாளன்று வாக்குசாவடிகளில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் மூன்று கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 2213 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குசாவடிகளில் பணியாற்ற 10 ஆயிரத்து 624 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குசாவடிக்கு தலைமை வாக்குசாவடி அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் என மொத்தம் 5 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முகாம் கடந்த 24ம் தேதி நடந்தது. 2ம் கட்ட பயிற்சி முகாம் அடுத்த மாதம் முதல் வாரத்திலும், 3ம் கட்ட பயிற்சி முகாம் வாக்குபதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதல்கட்ட பயிற்சி முகாமிற்கு 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அழைக்கப்படவில்லை. தேர்தல் பணிக்காக பள்ளிகள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து அழைப்பாணை வராததால் ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தேர்தல் பணியில் விடுபட்ட ஆசிரியர்கள் மறு நியமனம் செய்யும் வகையில் விடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே விடுபட்ட ஆசிரியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தாலூகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு தாசில்தாரிடம் பெயர்களை பதிவு செய்து கொண்டால் அடுத்த கட்ட பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Recruiters ,
× RELATED சர்வர் கோளாறு காரணமாக டி.என்.பி.எஸ்.சி....