புதுகையில் நள்ளிரவில் துணிகரம் சைடு லாக்கை உடைத்து பைக்கை லாவகமாக திருடிச்சென்ற வாலிபர் சிசிடிவி கேமராவில் பதிவு

புதுக்கோட்டை, மார்ச் 29: புதுக்கோட்டையில் நள்ளிரவில் தனியார் நிறுவனம் முன் நிறுத்தியிருந்த பைக்கின் சைடு லாக்கை உடைத்து லாவகமாக வாலிபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை  அடுத்த மேட்டுப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகன்  வளன்பிரகாஷ். இவர் புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதியில் உள்ள ஒரு  தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியின் காரணமாக  அலுவலகத்திலேயே தங்குவது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் வளன்பிரகாஷின் தந்தை  மார்ட்டினின் நண்பரின் புதிய பைக்கை பிரகாஷ் தனது அலுவலகத்திற்கு  எடுத்து வந்து அலுவலகத்திற்கு முன் நிறுத்தி வாகனத்தை பூட்டிவிட்டு  வழக்கம்போல் அவரது அலுவலகத்தில் உறங்க சென்றுள்ளார். இந்நிலையில் காலை  எழுந்து பார்க்கும்போது அவர் நிறுத்திய பைக் அந்த இடத்தில் இல்லாதது  தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வளன்பிரகாஷ் செய்வதறியாமல் நின்றபோது அவர் பணிபுரியும் நிறுவனம் உள்ள இடத்தில் ஒரு பல் மருத்துவமனையில்  சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனை  நிர்வாகத்துடன் பேசி அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.அதில்  ஒரு வாலிபர் அசால்ட்டாக நடந்து வந்து பைக்கை சோதனையிடுகிறார். பைக் சைடுலாக்  போட்டது தெரிந்ததையடுத்து சுற்றுமுற்றும் பார்க்கிறார். யாரும் தன்னை  கவனிக்கவில்லை என்பதை அறிந்து காலால் பைக் சைடு லாக்கை  இரண்டு, மூன்று தடவை உதைத்து லாக்கை உடைக்கிறார். இதன் பிறகு பைக்கை எடுத்துக்கொண்டு தப்பித்து செல்கிறார்.இந்த காட்சி  அனைத்தும் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து  வளன்பிரகாஷ் சிசிடிவி கேமரா காட்சிகளுடன் புதுக்கோட்டை நகர காவல்  நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை பெற்ற  காவல்துறையினர் திருடியவர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை  வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் இளைஞர் ஒருவர் பைக்கை திருடிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில்  பதிவாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து சம்பந்தப்பட்ட வாலிபரை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

× RELATED காரைக்காலில் பைக் திருடிய சகோதரர்கள் கைது