×

தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுமக்களின் பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படும் தோகைமலை பகுதியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பிரசாரம்

பெரம்பலூர், மார்ச் 29: தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுமக்களின் பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படும் என்று தோகைமலை பகுதியில் பெரம்பலூர் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பிரசாரம் செய்தார்.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று தோகைமலை பகுதியில் பிரசாரம் செய்தார். புழுதேரி ஊராட்சி சீத்தப்பட்டியில் தொடங்கிய பிரசாரத்தை திமுக மாவட்ட பெறுப்பாளர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். குளித்தலை எம்எல்ஏ ராமர், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். புழுதேரி, ஆர்டிமலை, காவல்காரன்பட்டி, வடசேரி, பில்லூர், பாதிரிபட்டி, கல்லடை, கீழவெளியூர், தோகைமலை, சின்னரெட்டிபட்டி, தெலுங்கபட்டி, நாகனூர், கழுகூர், சின்னையம்பாளையம், கூடலூர் பேரூர், கள்ளை, புத்தூர், ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், நெய்தலூர், சேப்பளாப்பட்டி நிறைவாக முதலைபட்டி பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார்.

அப்போது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்தால் மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் திமுகவும் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு தோகைமலை ஒன்றியத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பஞ்சப்பட்டி, பாப்பக்காப்பட்டி, கழுகூர், தோகைமலை, நல்லூர், புத்தூர், வடசேரி, புழுதேரி குளங்களில் காவிரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆண்டிற்கு 300 மாணவர்களுக்கு இலவச கல்வியும், படித்த 300 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள், ஆண்டுக்கு 2 முறை இலவச மருத்துவ முகாம் போன்ற பொதுமக்களின் பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படும் என்று வேட்பாளர் பச்சமுத்து தெரிவித்தார். பிரசாரத்தில் ஐஜேகே மாவட்ட பொறுப்பாளர் பிச்சை, பிரகாஷ் கண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் பெரியசாமி கவுண்டர் மற்றும் மதிமுக உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : election ,Bareevantar ,campaign ,IJK ,area ,Thokaimalai ,
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...