×

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

பெரம்பலூர், மார்ச் 29: பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கி26ம் தேதி வரை நடந்தது. இதில் பெறப்பட்ட 41 மனுக்களில் 32 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மனுக்கள் பரிசீலனையில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டு, 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுக்கள் வாபஸ் தொடர்ந்து இன்று (29ம் தேதி) வேட்பாளர் பட்டியல் இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படவுள்ளது.பெரம்பலூர் சட்டமன்ற தனி தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகள், குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 652 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி கடந்த மாதமே பெங்களூருவில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு 1,603 பேலட் யூனிட், 851 கண்ட்ரோல் யூனிட், 943 விவிபேட் எனப்படும் வாக்குகளை உறுதி செய்யும் காகிததணிக்கை இயந்திரங்கள் பெறப்பட்டு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக அறையில் வைத்து பூட்டி சீல் வைத்து பாதுகாப்புடன் இருந்தது.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் சட்டமன்றதொகுதிக்கான முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்டிஓ விஸ்வநாதன், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான(பொ) மஞ்சுளா முன்னிலையில் பூட்டு திறக்கப்பட்டு குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டது. இதற்காக குன்னம் தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களோடு திடீர் பழுதானால் மாற்றி கொள்ள ஏதுவாக கூடுதலாக 20 சதவீத இயந்திரங்கள் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டது.இவற்றை குன்னம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வராஜ் முன்னிலையில் வருவாய் துறையினர் பாதுகாப்பாக பெற்று அங்குள்ள ஸ்ட்ராங்ரூமில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Kunnam Assembly ,constituency ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...