×

நல்லிபாளையத்தில் குட்டையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

நாமக்கல், மார்ச் 29: நாமக்கல் அடுத்துள்ள நல்லிபாளையத்தில் குட்டையில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த குட்டையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்லை அடுத்துள்ள நல்லிபாளையத்தில் உள்ள குட்டையின் நீரை பயன்படுத்தி கருப்பட்டிபாளையம், ராக்கம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. மேலும், கால்நடைகளின் குடிநீர் தேவையையும் இந்த குட்டை பூர்த்தி செய்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குட்டைக்கு வரும் நீர்வழி பாதை தடைபட்டுள்ளதால், மழை காலங்களில் தண்ணீர் வருவது தடுக்கப்பட்டுள்ளது.  இதனால், தற்போது கழிவு நீரை சேமித்து வைக்கும் குட்டையாக மாறி வருகிறது.  நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான குட்டைகள், தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், நல்லிபாளையம் குட்டையில் தண்ணீருக்கு பதிலாக, கழிவுநீர் தேங்கியுள்ளது.

இதனால் துற்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நல்லிபாளையம் குட்டை, தற்போது  குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.  கழிவுநீர் தேங்கி உள்ளதால் நிலத்தடி நீரின் தன்மை மாறி வருகிறது. இந்த குட்டையில் இருந்து மண் அள்ளப்படுவதால், கரையும் பலவீனமடைந்து வருகிறது. குட்டைக்கான நீர்வழி பாதையை சீரமைத்தால், கால்நடைகளுக்கு குடிநீர் தேவைக்காவது இதை பயன்படுத்தலாம். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்

Tags :
× RELATED புகையிலை பொருட்கள் விற்ற 2 பேக்கரிக்கு சீல்