×

தேன்கனிக்கோட்டையில் கடும் வறட்சி போர்வெல்களில் நீர்மட்டம் 1000 அடி வரை சரிந்தது தண்ணீர் இல்லாததால் உருளைக்கிழங்கு விளைச்சல் பாதிப்பு

தேன்கனிக்கோட்டை,  மார்ச் 29: தேன்கனிக்கோட்டையில் நிலவும் கடும் வறட்சியால், போர்வெல்களில்  நீர்மட்டம் ஆயிரம் அடி வரை சரிந்துள்ளது. இதனால் கிராமங்களில் குடிநீர்  தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வாட்டி  வதைக்கிறது. பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம்  அதிகரித்து 95 டிகிரி வரை பதிவானது. இம்மாத தொடக்கத்தில்  படிப்படியாக  அதிகரித்து, கடந்த ஒரு வாரமாக 99 டிகிரி வெயில்  பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டையில் கடந்த நவம்பர் மாதம் முதல்,  தொடர்ச்சியாக 5 மாதங்கள் மழை பெய்யவில்லை. மாறாக கடும் வெயில்  அடிப்பதால், இங்குள்ள ஏரி, குளம், குட்டைகளில் இருந்த தண்ணீர்  வற்றிப்போனது.  தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் பகுதிகளில்  உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்து விட்டது. 400 முதல்  500 அடி வரை இருந்த நீரோட்டம், தற்போது ஆயிரம் அடிவரை தாழ்ந்து  போனது. இதனால் கிராமங்களில், குடிநீர் வழங்கிய திறந்தவெளி கிணறுகள்  மற்றும் ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு, கடும் குடிநீர் பிரச்னை  ஏற்பட்டுள்ளது. தவிர, ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் முழுமையாக கிடைக்காததால்  கிராம மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். விவசாய கிணறுகளிலும்  தண்ணீர் வற்றி விட்டதால், கிணறுகளை தூர்வாரவும், புதிதாக ஆழ்துளை கிணறு  அமைக்கவும், விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவு செய்த போதிலும், போதிய அளவு தண்ணீர்  கிடைப்பதில்லை. காய்கறி செடிகள், பயிர்கள் காய்ந்து வரும்  நிலையில், ஆழ்துளை கிணறுகளும் வற்றி விட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து, தேன்கனிக்கோட்டை  பகுதியில் உள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் வீணாக கடலில் கலக்கும்  தண்ணீரை ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் சேமிக்க முன்னேற்பாடு பணிகளை  மேற்கொள்ள  வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags : rainfall ,drought ,
× RELATED தமிழ்நாட்டில் மே 20ம் தேதி அதி...