×

தேர்தல் பிரசார பகுதிகளில் அமைச்சர்கள் விதிமீறலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் ஓட்டம்? பரபரப்பு புகார் திசை மாறி பறக்கும் பறக்கும் படையினர்

மதுரை, மார்ச் 29:  தேர்தல் பிரசார பகுதிகளில் அமைச்சர்களின் விதிமீறல்களை தடுக்க முடியாமல் அதிகாரிகள் அஞ்சி நடுங்குவதாகவும், பறக்கும் படையினர் திசை மாறி பறந்து தப்புவதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அமைச்சர்களுக்கும் பொருந்தும். ஆனால் மதுரை மாவட்ட தொகுதிகளின் தேர்தல் பிரசார களத்தில் விதிமீறல்கள் எல்லை மீறி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. வேட்பாளர் பிரசார வாகனத்துடன் 2 வாகனம் பின்தொடர்ந்து செல்ல மட்டுமே அனுமதியாகும். ஆனால் தேனி மக்களவை தொகுதியில் இடம் பெறும் சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார், மதுரை மக்களவை தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரத்தில் வாகன அணி வகுப்பே நடக்கிறது. இதை அதிகாரிகள் தடுக்க நினைத்தாலும் முடியாமல் அஞ்சி நடுங்கும் நிலையே நிலவுவதாகவும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வந்து, திரும்பி செல்லும் வரை அதன் சுற்று வட்டாரத்தில் பறக்கும் படை வேறு திசை மாறி இறக்கை கட்டி பறக்கிறது. இதனால் இலவச வேட்டி, சேலை மற்றும் பணம் தாராளமாக புழங்குகிறது. வங்கிகள், ஏ.டி.எம்.க்கு கொண்டு செல்லும் பணத்தை படுஜோராக பறிமுதல் செய்கிறார்கள், இது தவிர திருமணம், மருத்துவ செலவு உள்ளிட்ட வேறு முக்கிய தேவைக்கு சாதாரண மக்கள் எடுத்து செல்லும் பணமும், வியாபாரிகள் எடுத்து செல்லும் பணமும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் பிடிக்கப்படுகின்றன. உதாரணமாக 2 நாட்களுக்கு முன் உசிலம்பட்டி அருகே கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை பறிமுதல் செய்ததால், அவர்கள் டீ குடிக்க கூட காசு இல்லாமல் தவித்தது பரிதாபத்திற்குரியது.

திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு கடைக்கு சென்று நகை வாங்க முடியாமலும், காதணி விழாவுக்கு கம்மல் வாங்க முடியாமலும் திண்டாடும் நிலை உள்ளது. இதனால் மதுரை நகை கடை பஜாரில் நகை வாங்க வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நிச்சயித்த திருமணத்திற்கு கல்யாண மண்டபம் புக் செய்வதற்கு கூட பணம் எடுத்து செல்ல முடியவில்லை. ஆனால் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்காக பணம் கட்டுக்கட்டாக கொண்டு செல்லப்பட்டும் எங்கும் பிடிபட்டதாக தகவல் இல்லை. இது குறித்து மதுரை மக்களவை தொகுதி சுயேச்சை வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரத்தில் 25க்கும் மேற்பட்ட கார்கள் அணி வகுத்து செல்கிறது. அதை தடுக்க அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். எங்களை போன்ற சுயேட்சைகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அமைச்சர் பிரசாரம் என்றால் அங்கு பறக்கும் படை காணாமல் போய்விடுகிறது. கண்டும், காணாதது போல் தப்பி ஓடுகிறார்கள். அமைச்சர்களின் விதிமீறலை தடுப்பது யார்? என்பதே புரியாத புதிராக இருக்கிறது. தேர்தல் புகார் பிரிவுக்கு போன் செய்து அமைச்சர் விதிமீறல் குறித்து கூறினால், ராங் நம்பர் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்கள். ஒரு சினிமா பட காமெடியில் நடிகர் கருணாஸ், போலீஸ் ஸ்டேசனில் டெலிபோனை எடுத்து ராங் நம்பர் என்று சொல்வது போல் சொல்லி தப்புகிறார்களோ என்னவோ? இப்போதே இந்த குளறுபடி நடக்கிறது. சித்திரை திருவிழா தேரோட்டம், எதிர்சேவை நாளில் நடக்கும் வாக்கு பதிவில் இரவு 8 மணி வரை நடக்கும்போது விதிமீறல்கள் தடுக்கப்படுமா? கள்ள ஓட்டுகளை தடுக்க முடியுமா? என்பது பெருத்த சந்தேகத்தை கிளப்புகிறது’’ என்றார்.

Tags : Ministers ,ministries ,election campaign areas ,troops ,
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...