×

கரூர்- கோவை சாலையில் நடைபாதையில் குழாய்கள் பாதசாரிகள் கடும் அவதி

கரூர், மார்ச் 29:கரூர் கோவை சாலையில் உள்ள நடைபாதை மீது போடப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்திட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மனோகரா கார்னர் பகுதியில் இருந்து திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை கோவை சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் வணிக வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. கரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் இங்கு வந்து செல்கின்றனர். கரூரில் அதிகளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்நிலையில் கடைகளின் முன்புள்ள சாக்கடை வடிகால் மீது கோவை சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடைகளில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த நடைபாதையின் வழியாக சென்று வருகின்றனர். கரூர் நகர பகுதி முழுவதும் தற்போது கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ள இரும்பினாலான குடிநீர் குழாய்கள் அனைத்தும் பல பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக இரும்பு குழாய்கள் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல பகுதிகளில் நடைபாதையில் முட்புதர்களும் ஆக்கிரமித்துள்ளன.எனவே இந்த இரும்பு குழாய்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : pedestrians ,road ,Coimbatore ,Karur ,
× RELATED கத்தி காட்டி நகை பறித்த வாலிபர் கைது