×

சிறுவனை வெட்டிக்கொலை செய்த வழக்கு இளைஞரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு

சென்னை, மார்ச் 29:  சிறுவனை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து  உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர் ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.நாங்குநேரியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். துபாயில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரேமா, தனது தாய், மகன் தருண் மாதவ் மற்றும் மகளுடன் நெல்லை பேட்டையில் வசித்து வந்தார்.  இந்நிலையில், பிரேமா அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற 28 வயது இளைஞருக்கு தனது உறவினரான கலைச்செல்வியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து ஆறுமுகத்திற்கும் கலைச்செல்விக்கும் திருமணம் நடந்தது.   இந்நிலையில், கலைச்செல்வியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஆறுமுகம் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால், கலைச்செல்வி கணவரை பிரிந்து மும்பையிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி, தனது குடும்பத்தை பிரித்துவிட்டதாக கூறி பிரேமாவை திட்டியபடி வந்த ஆறுமுகம், தெருவில் விளையாடி கொண்டிருந்த  சிறுவன் தருண் மாதவை, அரிவாளால் 24 இடங்களில் வெட்டியுள்ளார்.   இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், ஆறுமுகத்துக்கு தூக்கு தண்டனையும், ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து 2018 மார்ச் 20ல்  தீர்ப்பளித்தது. அபராதத்தை பிரேமாவிடம்  வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு,  உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆறுமுகமும் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடும் செய்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் தலைமைக் குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.தீர்ப்பில்,  சம்பவம் நடந்தபோது ஆறுமுகத்தின் மனநிலை சமநிலையில் இல்லை. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. மேலும், ஆறுமுகம் வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED வனவிலங்கு வேட்டையாட முயன்றவருக்கு அபராதம்