×

திருச்செந்தூர், நாசரேத், விளாத்திகுளத்தில் வாகன சோதனையில் ரூ.10.19 லட்சம் பறிமுதல்

திருச்செந்தூர், மார்ச் 29: திருச்செந்தூர், நாசரேத் மற்றும் விளாத்திகுளத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவினர் ரூ.10.19 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர் - குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி சுஜாதா, எஸ்ஐ பலவேசம் மற்றும் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி, சோதனையிட்ட போது, மணப்பாடு சுனாமிநகரைச் சேர்ந்த டினோசன் (32) என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.50 லட்சம் ரொக்கப்பணத்தை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதைபோல் பறக்கும்படை அதிகாரி அழகர், எஸ்ஐ பாஸ்கர் மற்றும் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று நாசரேத் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்ட போது, தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்த சரவண பாஸ்கர் (35) என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 610 பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்தனர். விளாத்திகுளம் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பேடிபேவி தலைமையிலான குழுவினர் விளாத்திகுளம் பஸ்நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அவர் விளாத்திகுளம் காமராஜநகரை சேர்ந்த பழனி மகன் சண்முகசுந்தரம் முறையான ஆவணம் இல்லாமல் ரூ.4 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் அலுவலர்கள் ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர்.தூத்துக்குடி ரோச் பூங்கா பகுதியில் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் உரிமையாளர் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் ராஜராஜனிடம் ரூ.2.53 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் வட்டார வளர்ச்சி அதிகாரி பூர்ணகலா தலைமையிலான பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சோதனையின்போது பைக்குகளில் செல்பவர்கள் கையில் ரூ.30 ஆயிரம் இருந்தாலே பறக்கும் படையில் உள்ள போலீசார் அவற்றிற்கான ஆதாரம் கேட்டு மிரட்டி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Tiruchendur ,Nazareth ,Vettathikulam ,
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம்...