×

வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

விழுப்புரம், மார்ச் 29:   விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ள 3,234 வாக்குச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 3,234 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. விழுப்புரம் தொகுதியில் நடைபெறும் தேர்தலை பார்வையிடுவதற்காக தேர்தல் பொது பார்வையாளராக மொகிந்தர்பால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், நேற்று காலை விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் மொகிந்தர்பால் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் குடிநீர், கழிவறை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதள வசதி உள்ளதா என்றும் பார்வையிட்டார். மேலும் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை கேட்டறிந்ததோடு வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி உள்ளனவா எனவும் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜானகிபுரம், கண்டமானடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் பொது பார்வையாளர் மொகிந்தர்பால் ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் பிரபுவெங்கடேஸ்வரன், மண்டல துணை தாசில்தார்கள் வெங்கடசுப்பிரமணியன், வெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர் சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...