×

ரத்தசோகை, ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி

புதுச்சேரி, மார்ச் 29:இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகமும், முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சியை நேற்று நடத்தின. ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த இம்முகாம், கண்காட்சியை நலவழித்துறை துணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர் அல்லிராணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் தர், சந்திரசேகரன், இந்திரா, சரண்யா, நர்மதா மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள், கர்ப்பிணிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, துணை இயக்குநர் டாக்டர் அல்லிராணி பேசும்போது, ரத்தசோகை இருந்தால் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய்கள் தாக்கும். ஆகையால் ரத்தசோகையை போக்கும் இரும்பு சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி, கீரைகளில் இந்த சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். ஒரு வயது முதல் குழந்தைகளுக்கு காய்கறி, கீரை சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வரவேண்டும். கால்சியம் சத்து குறைவாக இருப்பதால் தான் பெண்களுக்கு கைகால் குடைச்சல் பிரச்னை ஏற்படுகிறது. கேழ்வரகு, கம்பு கூழ் தினமும் குடித்து வந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வராது என்றார்.கண்காட்சியில் பழங்கள், காய்கறிகள், பயிறு, தானிய, பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. ரத்தசோகை ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், அதற்கான தீர்வுகளை எடுத்துக்காட்டும் வரைபடங்கள் வைக்கப்பட்டிருந்தன.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...