×

பட்டப்பகலில் பயங்கரம்; நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

சென்னை, மார்ச் 29: அம்பத்தூர் அருகே பாடியில் பட்டப்பகலில் தேமுதிக பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர்  கும்பல் குறித்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    அம்பத்தூர், பாடி, குமரன் நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (43). இன்ஜினியர். கட்டிட கான்ட்ராக்டரான பாண்டியன் தேமுதிக  பொறியாளர் அணி இணை  செயலாளராகவும் இருந்தார். கடந்த 2006ம் ஆண்டு தியாகராய நகர் மற்றும் 2016ம் ஆண்டு வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி  அடைந்தவர். இவரது மனைவி செல்வி (36). தம்பதிக்கு ரோகித் (15), கீர்த்தன் (12), ஜெய்ஷ் (6) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். நேற்று காலை 9 மணிக்கு மகன் ரோகித்தை திருமங்கலம்  பகுதி பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சீனிவாசன் நகர் மெயின் ரோடு டாஸ்மாக் கடை அருகே வந்தபோது 4 பேர் கும்பல் பாண்டியனை வழிமறித்து வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து  வைத்திருந்த ஆயுதங்களால் பாண்டியனை  சரமாரியாக வெட்டி உள்ளனர்.  இதை சற்றும் எதிர்பாராத பாண்டியன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அந்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி தலையில் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே பாண்டியன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனையடுத்து  அந்த கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றனர்.  தகவலறிந்து அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  பாண்டியனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உடனே மோப்ப நாய் டைசன் வரவழைக்கப்பட்டது. அது, கொலை சம்பவம் நடந்த இடத்தில் படிந்திருந்த ரத்தத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. பின்னர்,  படுத்துக்கொண்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷமினா பானு  தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை முன்விரோதம் காரணமாக  கொலை செய்தார்களா? தொழில் போட்டியா? என்ற கோணங்களில் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : barbarians ,Dwightyaku ,jungle ,
× RELATED 4 நக்சல்கள் பலி