×

கொளத்தூர், மாமல்லபுரம் பகுதிகளில் பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கிய பொதுமக்கள்

திருப்போரூர், மார்ச் 29: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை  ஆசிரியர் ச.ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.திருப்போரூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் ஆகியோர் கல்விச்சீர் ஊர்வலத்தை தொடங்கி  வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பட்டர்பிளை, டைமண்ட் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களின் சார்பிலும் பொதுமக்கள், பெற்றோர்கள் சார்பிலும் ₹40 ஆயிரம் மதிப்பிலான  எழுது பொருட்கள், பீரோ, நாற்காலிகள், கணினிகள் பள்ளிக்கு சீர் வரிசையாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.  கொளத்தூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். உதவித் தலைமை ஆசிரியர் ச.குருநாதன் நன்றி கூறினார்.

இதேபோல், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளித்  தலைமை ஆசிரியை லதா வரவேற்றார். திருக்கழுக்குன்றம் வட்டார வள மேற்பார்வையாளர் கவிதா, ஆசிரிய பயிற்றுனர் கரேலின் பெஸ்ஸி ஆகியோர் கல்விச்சீர்  ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் சீனிவாசன், மேலாண்மை குழுத்தலைவர் பிரேமா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்  சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியை யோகாம்பிகை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.முன்னதாக பள்ளியின் பெற்றோர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், முன்னாள் மாணவர்கள் சார்பில் ₹1 லட்சம் மதிப்புள்ள பீரோ, தண்ணீர் தொட்டி, லேப்டாப், எழுது  பொருட்கள் ஆகியவை பள்ளிக்கு கல்விச்சீராக வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை லீமா ரோஸ்லின் நிர்மலா நன்றி கூறினார்.  செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த,  சென்னேரியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில், கிராம மக்கள் சார்பில் சீர்வரிசை வழங்கும்  நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதையொட்டி, ₹1.5 லட்சம் மதிப்பிலான கலர் பிரின்டர், எல்இடி டிவி, நாற்காலிகள், பீரோ, கல்வி உபகரணங்கள் உள்பட ஏராளமான பொருட்களை கல்வி சீர் வரிசையாக  வைத்து, பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று, பள்ளி தலைமை ஆசிரியை  செல்வதாரணியிடம், பொதுமக்கள் வழங்கினர்.
இதில், சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் கிருஷ்டோபர் பங்கேற்றார். உதவி தலைமை ஆசிரியர் உமையாள் வரவேற்றார். கல்வி சீர்வரிசைக்கு நிதியுதவி  செய்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் உட்பட அனைவருக்கும் பள்ளி ஆசிரியை சரஸ்வதி  நன்றி கூறினார். தொடர்ந்து, மாணவர்களின் பாரம்பரிய நடன கலை  நிகழ்ச்சிகள்  நடந்தன.

Tags : Citizens ,schools ,Mamallapuram ,Kolathur ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...