×

பறக்கும்படை அதிகாரிகள் கெடுபிடி மணப்பாறை மாட்டுச்சந்தை களையிழந்தது ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு

மணப்பாறை, மார்ச் 28: தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக பறக்கும்படை அதிகாரிகளின் கெடுபிடியால் மணப்பாறை மாட்டுச்சந்தை களையிழந்தது. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கால்நடை விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளது.  திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டு சந்தை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் வரை பிரசித்தி பெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூடும் சந்தை இரவு விடிய விடிய நடைபெற்று, புதன்கிழமை பிற்பகலில் தான் சந்தை முடிவடையும். அந்த அளவுக்கு இடைவிடாது 24 மணி நேரமும் சந்தை நடைபெறும். மணப்பாறை நகராட்சியின் பிரதான வருவாய் இந்த மாட்டு சந்தை வரி வசூலில் தான் கிடைக்கிறது. சுமார் 2 முதல் 3 கோடி ரொக்க பரிமாற்றத்தையும், 2000 முதல் 3000 மாடுகள் விற்பனையையும் இந்த சந்தையில் காண முடியும். இங்கு இறைச்சிக்காகவும், விவசாயத்திற்கும் தான் மாடுகள் அதிக அளவில் விற்பனை நடைபெறும்.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மணப்பாறை மாட்டு சந்தைக்கு நேற்றுமுன்தினம் மாடு வாங்குவதற்காக மணப்பாறை வந்த கேரள மாநிலத்தவர்களிடம் ரூ.4.20 லட்சம் ரொக்கம் தேர்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மாடு ஒன்றின் விலை சுமார் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.65 ஆயிரம் வரை விற்பனையாகும் நிலையில், தனி ஒரு விவசாயி வண்டி மாடுகள் ஜோடியாக வாங்குவதாக இருந்தாலும் ரூ.60 ஆயிரம் தேவை. வியாபாரிகள் ஒரு லாரியில் ஏற்றக்கூடிய வகையில் மாடுகள் வாங்கினாலும் ரூ. 5 லட்சம் தேவை என்ற நிலையில் கால்நடை விவசாயிகளும், மாட்டு வியாபாரிகளும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கையாள முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் குடும்ப செலவினங்களுக்காக கால்நடைகளை விற்பனை செய்த கால்நடை விவசாயிகளும் ரொக்கத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Flood officers ,cow dump brewery ,
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...