மண்ணச்சநல்லூர் பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு

மண்ணச்சநல்லூர், மார்ச் 28: மண்ணச்சநல்லூர் பகுதியில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நூதன விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி. இப்பகுதியில் வருகிற ஏப்ரல் 18ம்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்ணச்சநல்லூர் 3 ரோடு சந்திப்பு, சமயபுரம் நாலு ரோடு, கொள்ளிடம் டோல்கேட் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் திருமண அழைப்பிதழ் போன்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தின் நுழைவுச் சுவரில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை உணர்த்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. தாலுகா வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் ஓட் 100 சதவீதம் என்ற வடிவில் எல்இடி விளக்குகளால் அமைக்கப்பட்டு ஒளிர்கிறது.

வாக்களிக்க வாருங்கள் என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் குடிநீர் பாட்டில்களால் ஓட் 100 சதவீதம் பொதுமக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள முக்கிய ஓட்டல்கள், மளிகைகடைகளில் தரும் ரசீதுகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று முத்திரை குத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பல முறைகளில் வாக்காளர்களை வாக்களிக்கு உணர்த்தும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மண்ணச்சநல்லூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்காளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

× RELATED நடிகர் சங்கத்தேர்தல்: வாக்களித்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்