×

முத்துப்பேட்டையில் 8 ஆண்டுகளாக செயல்படாத உழவர் சந்தை மீண்டும் திறக்கப்படுமா? பொதுமக்கள் விவசாயிகள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை மார்ச்28: முத்துப்பேட்டையில் 8 ஆண்டுகளாக செயல்படாத உழவர்சந்தை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என மக்கள் , விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை குமரன் கடைதெரு அருகே பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை  வியாழன் தோறும் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட உழவர்சந்தையும் உள்ளது. இதனை திருவாரூரில் உள்ள வேளாண் விற்பனைக்குழு நிர்வகித்து வருகிறது. கிராம பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த பணப்பயிர்கள், கீரை ,காய்கறிகள் ஆகியவற்றை இடைதரகர்களின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக இந்த சந்தை திறக்கப்பட்டது. தினசரி இயங்கும் வகையில் திறக்கப்பட்ட இந்த உழவர்சந்தையால் இப்பகுதியினர்பெரும் அளவில் பயனடைந்தனர்.இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளும், தேங்காய், கிழங்கு, பழவகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்,கருவாடுகளும் இங்கு விற்பனைக்கு வந்தன. குறைந்த விலை சரியான எடையளவுடன் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. வியாபாரிகள் பயனுக்காக மின்னணு தராசுகள் எடைக்கற்கள் ஆகியனவும் உழவர்சந்தை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. உழவர்சந்தையால் விவசாயிகளும் பொதுமக்களும் ஒருசேர பயனடைந்தனர். சந்தைக்கு காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுவர இலவச பஸ் சேவையும் அமல்படுத்தபட்டது. வாரம் ஒருமுறை வாரச்சந்தை வந்து திரும்பியவர்கள் உழவர்சந்தைக்கு தினமும் வந்து ப்ரஷ் ஆக காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் பேரூராட்சி நிர் வாகத்தால் இயங்கி வந்த வாரச் சந்தை கூட்டம் குறைந்து வெறிச்சோடியது. வெளியூரில் இருந்து வாரம் தோறும் வரும் வியாபாரிகள் தங்களது வியாபாரம் படிப்படியாக குறைந்து  போனதால் உழவர்சந்தையின் மீது ஆத்திரமடைந்தனர்.  இந்நிலையில் இடைதரகர்களும் வெளியூர்வியாபாரிகளும் சந்தை வியாபாரத்தில் ஊடுருவியதால் உழவர்சந்தை நாளடைவில்  மூடப்பட்டது. இதனால் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் விற்பனைக்குழு நிர்வாகிகள் உழவர்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக கூறி விவசாயிகளை அழைத்து கருத்தரங்கம் நடத்தி அடையாள அட்டைகள் ஆலோசனைகள் வழங்கினர். அன்றோடு அந்த நிகழ்வு முடிந்தது.இதனால் சுமார்எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் உழவர்சந்தையில் உள்ள கடைகள் கட்டடங்கள், கழிப்பிடங்கள் சிதிலமடைந்து வீணாகி வருவதுடன் கட்டிடங்களிலும் சந்தைவளாகம் முழுவதும் புல்புதர்மண்டிகிடக்கிறது.

சமீபத்தில் கஜா புயலின் கோரதாண்டவத்திலும்  அங்குள்ள மரங்கள் சேதமாகிவிட்டது. இதனால் களையிழந்து மூடு விழா கண்ட இந்த  உழவர்சந்தையை மக்கள் பயனுக்காக மீண்டும் திறந்து பயனுக்கு தரவேண்டுமென இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து திமுக ஆட்சியில் உழவர்சந்தை வர பெரும் முயற்சி மேற்க்கொண்ட முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் திமுக மாவட்ட துணைச் செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் கூறுகையில், இப்பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய், பலவகை கீரைகள் மற்றும் காய்கறிகளை குறைந்த விலையில் கிடக்க வேண்டும் என்று  இப்பகுதி மக்களுக்காக இந்த உழவர்சந்தை போராடி  கொண்டுவரப்பட்டு இந்த முக்கிய இடத்தில் திறக்கப்பட்டது.தற்பொழுது முத்துப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக பழைய பேருந்து நிலையம் காவல் நிலையம் குமரன் பஜார்ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் கீரை காய்கறிவகைகள் போன்றவைகளை தினந்தோறும் கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை அழைத்து இந்த உழவர்சந்தையில் இடம் அளித்து விற்பனை செய்தாலே இந்த உழவர்சந்தை பயன்பாட்டிற்கு வந்துவிடும்.  வேளாண் விற்பனைக்குழு நிர்வாகிகள் இனியாவது கருத்தில்கொண்டு துரித நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும் என்றார்.  இதுகுறித்து சமூக ஆர்வலர்முகமது மாலிக் கூறுகையில்,இந்த உழவர்சந்தையில் இங்கு பணிபுரியும் பணியாளர்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் பெறவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த சந்தை செயல் படுவதாக உயர்அதிகாரிகள் மட்டத்தில் கணக்கு காட்டி வருவதாக தெரியவருகிறது.  அதனால் செயல் படாத இந்த சந்தையை அடிக்கடி செயல் படுவது போன்று மூடி திறப்பது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மீண்டும் இந்த உழவர்சந்தையை செயல் பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
“அரசு வீண் செலவு - மற்றும் அலட்சியம்”இந்த உழவர்சந்தையில் அரசு  வேளாண் விற்பனை குழு சார்பில் சந்தை நிர்வாக அலுவலர்ஒருவரும் இரண்டு வாட்ச்மேன்களும்  பணி புரிந்து வருகின்றனர். இவர;களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. செயல்படாத உழவர்சந்தைக்கு சம்பளம் கொடுக்கும் துறை சார்ந்த அலுவலகம் ஏன்? இந்த உழவர்சந்தையை செயல் பாட்டிற்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை? என்பது பலருக்கும் கேள்விக் குறியாக உள்ளது.

Tags :
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு