×

வேதாரண்யம் அடுத்த தென்னடாரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்

வேதாரண்யம், மார்ச் 28:      வேதாரண்யம் தாலுகாவில் உள்ள தென்னடார், பஞ்சநதிகுளம் மேற்கு தகட்டூர்,  உள்ளிட்ட கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இந்த  பகுதிகளில் கொள்ளிடம் குடிநீர் விநியோகத்தில் தொடர்ந்து பாதிப்பு  ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அலையும் நிலை  ஏற்பட்டுள்ளது. தென்னடார் தகட்டூர் இடையே 4 கிலோ மீட்டர் சாலையில் 7  இடங்களில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சேதம் ஏற்பட்டிருந்ததால்   குடிநீர் விநியோகம் கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது.  இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடமும், குடிநீர் வாடிகால் வாரிய அதிகாரிகளிடமும்  புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மூன்று நாட்களாக  அவதிப்பட்ட பெண்கள் நேற்று காலை காலிகுடங்களுடன் தென்னடாரிலிருந்து வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில்  தகட்டூர்  கடைத்தெருவில் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.  தகவல் அறிந்து  வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய திட்ட அலுவலர் அண்ணாதுரை, வாய்மேடு இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்த பெண்களோடு  பேச்சுவார்த்தை நடத்தினார்.  பேச்சுவார்த்தையில் தென்னடார் கிராமத்திற்கு  குடி தண்ணீர் வந்தால்தான் நாங்கள் ஊருக்கு செல்வோம் எனக்கூறி அங்கு உள்ள  பேருந்து நிழற்குடையில் காலி குடங்களுடன் அமர்ந்துவிட்டனர்.  இன்ஸ்பெக்டர் சுகுணா குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோடு செல்போனில்  தொடர்பு கொண்டு பேசி வண்டுவாஞ் சேரியிலிருந்து  நீரேற்று தொட்டியிலிருந்து  தென்னடார் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர்  ஏற்ற ஏற்பாடு  செய்தார்.  தங்கள் ஊருக்கு தண்ணீர் வந்து விட்டது என்பதை உறுதி செய்த  பெண்கள்  சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து விட்டு பின்னர் வீடு  திரும்பினர்.

Tags : Vedaranyam ,southnore ladies ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...