×

அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் சிவகாசியில் அத்துமீறி இயக்கப்படும் மினிபஸ்கள் அரசு பஸ்களின் வசூல் பாதிப்பு

சிவகாசி, மார்ச் 28: சிவகாசியில் மினிபஸ்களை உரிய வழித்தடத்தில் இயக்காமல் இஷ்டத்திற்கு ஓட்டுவதால் அரசு பஸ்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளில் ஏராளமான மினி பஸ்கள் இயங்கி வருகின்றன. திருத்தங்கல், சாட்சியாபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், செங்கமலநாச்சியார்புரம், அய்யம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மினி பஸ்கள் உரிய வழித்தடத்தில் இயக்கப்படாமல் இஷ்டத்திற்கு ஓட்டுவதால் அரசு பஸ்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சில மினி பஸ்கள் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பகல் நேரங்களில் இஷ்டத்திற்கு மினி பஸ்கள் டீசல் நிரப்பி வருகின்றன.ஆபத்து அபாயம் தெரியாமல் டீசல் நிரப்பும் நேரத்தில் சில பயணிகள் செல்போன் பேசியபடி, சிகரெட் பிடித்தபடி உள்ளனர். இதுபோன்று பயணிகளை வைத்துக்கொண்டு டீசல் நிரப்பும் மினி பஸ் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பயணி சசி கூறும்போது, ‘‘சிவகாசியில் மினி பஸ்கள் எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட வழித்தடத்தில் அவர்கள் இயங்குவதில்லை மாறாக அனுமதிக்கப்படாத பகுதிகளில் இயங்கி வருகின்றன. சில மினி பஸ்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் பங்கில் டீசல் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் அவசரத்திற்கு செல்லும் பயணிகள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பயணிகளின் மனநிலையை மினி பஸ் உரிமையாளர்கள் மதிக்கவில்லை. சம்பந்தப்பட்ட மினி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Tags : minibuses ,Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து