×

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜப்பானிய கலை பயிற்சி

கிருஷ்ணகிரி, மார்ச் 28:  கிருஷ்ணகிரி அடுத்த சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஜப்பானிய ஓரிகாமி, கிரிகாமி கலை பயிற்சி அளிக்கப்பட்டது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பானிய கலைகளான ஓரிகாமி, கிரிகாமி கலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை கும்பகோணத்தை சேர்ந்த ஓரிகாமி கலைஞர் தியாகசேகர் கற்பித்தார். அப்போது கத்திரிக்கோல், பசை இல்லாம் காகிதங்களை வெறும் மடிப்பில் மூலம் கொக்கு, மயில், குயில், வாத்து முதலான பறவைகளின் உருவங்கள், சிங்கம், புலி, குரங்கு போன்ற விலங்குகளை செய்து காண்பித்தார். இந்த கலைகளை மாணவர்கள் உற்சாகத்துடன் கற்று, அவர்கள் செய்த கலை பொருட்களை கண்காட்சியாக காட்சிப்படுத்தினர். தொடர்ந்து கத்திரிக்கோலை பயன்படுத்தி உருவங்களை செய்வது குறித்த பயிற்சியான கிரிகாமி கலையையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

இதுகுறித்து தியாக சேகர் கூறுகையில், ‘ஓரிகாமியில் காகிதத்தை ஒட்டவோ, வெட்டவோ கூடாது. காகிதத்தை மடிப்பதன் மூலமாக உருவங்களை உருவாக்க வேண்டும். இந்த கலை மூலம் காகிதத்தை மடித்தும், வளைத்தும், உருவங்களை உருவாக்கும் கலையை மாணவ, மாணவிகளுக்கு கலை உணர்வையும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யூகிக்கும் திறமையையும் வளர்க்கவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் உதவுகிறது,’ என்றார். இப்பயிற்சிக்கான  ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை வசந்தி செய்திருந்தார். இதில் கணித பட்டதாரி ஆசிரியர் சுகவனமுருகன், வெங்கட்ரமணன் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

Tags : Japanese ,government school students ,Krishnagiri ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்