×

41 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம், மார்ச் 28:  விழுப்புரம், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட, நேற்று நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையில், 41 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 28 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நாளை மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். தொடர்ந்து நாளை மாலை, போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், பகுஜன்சமாஜ் கலியமூர்த்தி, நாம்தமிழர் கட்சி பிரகலதா உள்பட 24 பேர் மொத்தம் 30 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆட்சியர் சுப்ரமணியன் முன்னிலையில் நடந்தது. இதில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இதில் 14 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 10 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார், பகுஜன்சமாஜ் கட்சி கலியமூர்த்தி, பாமக வடிவேல் ராவணன், தமிழ்நாடு இளைஞர் கட்சி அபிராமி, மக்கள் நீதி மய்யம் அன்பின்பொய்யாமொழி, நாம் தமிழர் கட்சி பிரகலதா, அகில இந்திய மக்கள் கழகம் ராஜா, சுயேட்சைகள் அரசன், அன்பழகன், கணபதி, கதிர்வேல், சாந்தகுமார், தேசிங்கு, ராஜசேகரன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக ஆட்சியர் சுப்ரமணியன் அறிவித்தார்.

2 சுயேட்சை வேட்பாளர்கள் சாதிச்சான்று வைக்காததால் அவர்களது மனுக்கள் உள்ளிட்ட 10 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள். தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது.கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட திமுக. தேமுதிக, அமமுக, மநீம, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சையை சேர்ந்த 33 பேர் 45 வேட்பு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.நேற்று கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயாதேவி முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை நடந்தது. அப்போது பல்வேறு காரணங்களால் 18 மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டதாகவும், திமுக, தேமுதிக, அமமுக வேட்பாளர் உள்பட 27 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் அனுசுயாதேவி அறிவித்தார்.

Tags : nominees ,
× RELATED தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தில் 2 பேர் தேர்வு