×

விதி மீறி ஆட்டோவில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் அதிமுக தேர்தல் பிரசாரம்

திருவள்ளூர், மார்ச் 28: திருவள்ளூர் நகரில் தேர்தல் விதியை மீறி ஆட்டோவில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைத்து, அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிக ஒலியால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பயன்படுத்தினால் வேட்பாளரின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பிரசார வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் விதி கூறுகிறது.

ஆனால், திருவள்ளூர் நகரில் சாதாரண ஆட்டோவில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை தேர்தல் விதியை மீறி பொருத்தி அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள்  வீடுகளின் வாசல் முன்பு நின்று பிரசாரம் செய்யும்போது ஏற்படும் அதிகமான ஒலியால் முதியோர், உடல் நலிவுற்றோர், குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘’மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் முன்பாகவும் இதுபோன்ற ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி அதிமுகவினர் பிரசாரம் செய்தனர். இதை தேர்தல் அதிகாரிகள் கண்டும், காணாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். மாவட்ட தேர்தல் அலுவலர் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்’’என்றனர்.

Tags : campaign ,AIADMK ,
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...