×

தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி கிராமிய கலை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கூடாது

சென்னை, மார்ச் 28: தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலை தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை காரணம் காட்டி தமிழக பாரம்பரிய கிராமிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, கைச்சிலம்பாட்டம், வில்லிசை போன்ற நிகழ்ச்சிகள் நடத்த தேர்தல் அலுவலர்களும், காவல் துறையினரும் அனுமதி மறுத்து வருகிறார்கள்.கிராமிய, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் 99 சதவீதம் கோயில் திருவிழாக்கள் சார்ந்துள்ள நிகழ்ச்சிகள்தான்.

இந்த கலைநிகழச்சிகளுக்கும் தேர்தல் பிரசாரத்திற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. தேர்தல் நடத்தை விதிமுறை காலங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எந்தவிதமான ஒலிப்பெருக்கிகளும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்களின் ஏழ்மை நிலையையும், வாழ்வாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய வழிபாடு மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், ஒலிபெருக்கி பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்