×

வந்தவாசியில் பரபரப்பு முதல்வர் வருகையையொட்டி தேர்தல் விதி மீறி சாலை பணி

* திமுகவினர் தடுத்து நிறுத்தி மறியல் * வாகனங்கள் அதிரடி பறிமுதல்


வந்தவாசி, மார்ச் 28: முதல்வர் வருகையையொட்டி தேர்தல் விதியை மீறி வந்தவாசியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதை திமுகவினர் தடுத்து நிறுத்தி சாலை அமைத்த வாகனத்தின் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெ.ஏழுமலையை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வந்தவாசி பழைய பஸ் நிலையத்தின் முன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து செய்யாறு, ஆரணி, போளூர், கலசபாக்கம் வழியாக திருவண்ணாமலை செல்கிறார்.

இந்நிலையில் நேற்று அவர் செல்லும் வழியான ஆரணி சாலையில் பயணியர் விடுதியில் இருந்து மும்முனி கிராமம் வரை வந்தவாசி நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக தார்சாலை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணியை நேற்று தொடங்கினர். இதையறிந்த திமுக எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்ட திமுகவினர் திடீரென அங்கு சென்று சாலை அமைக்கும் ரோலர் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்தவாசி தாசில்தார் அரிக்குமார், மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ராஜன் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

அப்போது, வந்தவாசி நகராட்சியில் 3வது குடிநீர் திட்டத்திற்காக நகரம் முழுவதும் பைப்லைன் அமைக்க சாலைகள் தோண்டப்பட்டு, அதற்கான தொகை நகராட்சி நிர்வாகம் ₹40 லட்சம் வரை செலுத்தி 5 வருடங்களுக்கு மேலாகிறது. அந்த பகுதியில் இதுவரை சாலை அமைக்காமல், இதுபற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டபோது நிதி இல்லை எனக்கூறினர். இதனால், இந்த சாலை குண்டும் குழியுமாகவே இருந்தது. இந்நிலையில் முதல்வர் இன்று வந்தவாசியில் பிரசாரம் செய்ய வருவதால் செல்லும் வழியில் அவசர, அவசரமாக புதிதாக சாலை அமைக்கும் பணி செய்வது தேர்தல் விதிமீறல் ஆகும். எனவே சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட 5 வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், இத்தனை நாட்களாக நிதி இல்லை என்றுக்கூறி நெடுஞ்சாலை துறையினர் மீது சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் கூறினர்.

அதற்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துகுமார், அவர்களை சமரசம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி கிடைத்ததும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்பேரில், தாசில்தார் அரிக்குமார் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

Tags : arrival ,Chief Minister ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...