×

கெட்ட ரத்தம் ஏற்றியதால் பலியான விவகாரம் 15 கர்ப்பிணி குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு கெட்டுப்போன ரத்தம் ஏற்றியது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:
சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றிய விவகாரம் அடங்குவதற்குள் இப்போது கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணி பெண்கள் இறந்தது தெரிய வந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல், முறைகேடுகளின் வெளிப்பாடு தான் இது. சுகாதாரத்துறையை கட்டமைப்பதில் தமிழக அரசு தோற்றுப் போய்விட்டது. சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலம் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு ரத்த வங்கிகளை முறையாக பராமரிக்கவில்லை. ரத்த பரிமாற்றம் தொடர்பான சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் மட்டுமே ரத்த வங்கிகளில் பணியாற்ற வேண்டும். ஆனால் அந்த படிப்பை படிக்காதவர்கள், தற்காலிக ஊழியர்கள் ரத்த வங்கிகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கவில்லை. அதிநவீன உபகரணங்கள் வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு,  பழைய உபகரணங்கள் வைத்து பணியாற்றுகிறார்கள்.

ரத்தம் கெட்டுப்போகாமல் இருக்க ரத்தத்தை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் பல அரசு மருத்துவமனைகளில் ரத்தத்தை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்க முடியாததால் மொத்த ரத்தத்தையும் அழித்துள்ளனர். ரத்த பரிமாற்றத்துக்காக, தமிழக அரசு உருவாக்கியுள்ள விதிகளை தமிழக அரசே மீறியுள்ளது. உலக சுகதார நிறுவனம், மத்திய அரசு வழங்கியுள்ள வழிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. கர்ப்பிணி பெண்களின் மரணம் தொடர்பாக தமிழக டாக்டர்கள் மட்டுமல்லாது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களை கொண்ட விசாரணை குழு அமைக்க வேண்டும். இறந்த 15 பெண்களின் குடும்பத்தினருக்கும், தலா ₹1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். சாத்தூரில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு இதுவரை அரசு வேலை வழங்கவில்லை. அவரின் குழந்தையின் கல்வி செலவை முழுவதும் அரசு ஏற்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ரவீந்திரநாத் கூறினார்.

Tags : families ,
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...