×

ஆணையம் நேரடியாக கண்காணிக்க வசதியாக ேதர்தல் பணி அலுவலர்களின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பார்வையாளர் சீமாஜெயன் தகவல்

தூத்துக்குடி, மார்ச் 28: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என்று தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் பார்வையாளர் சீமாஜெயன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் பொதுபார்வையாளர் சீமா ஜெயன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொதுபார்வையாளர் டாக்டர் மாதவி லதா ஆகியோர் கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி மற்றும் நோடல் அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள், நிலையான குழு அலுவலர்கள், வீடியோ கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வீடியோபதிவு செய்யும் அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அன்றைய நாளிலிருந்து நோடல் அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள், நிலையான குழு அலுவலர்கள், வீடியோ கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வீடியோ பதிவுசெய்யும் அலுவலர்கள் ஆகியோர் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்திய தேர்தல் ஆணையம், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 3 விதமாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. 1950 என்ற இலவச தொலைபேசி வாயிலாகவும், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1800-425-8541 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சி விஜில் ஆப் மூலம் தெரிவிக்கும் புகார் மீது பறக்கும் படை அலுவலர்கள் 15 நிமிடத்திற்குள் சம்பவ இடங்களுக்கு சென்று புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இந்நடவடிக்கைகளை 100 நிமிடங்களுக்குள் முடிக்கவேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதி இல்லை. பணம் எடுத்துச் செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை உடன் கொண்டு செல்லவேண்டும். ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள பரிசு பொருட்கள், மதுபானங்கள், வைத்திருப்போர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு ரிசார்ஜ் கார்டு, பரிசு கூப்பன்கள், டோக்கன்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குகிறார்களா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.10 லட்சத்திற்கு மேல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமானவரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் பொதுபார்வையாளர் சீமா ஜெயன் பேசியதாவது:-இரவு நேரங்களில் தேர்தல் விதி மீறல்கள் அதிகளவில் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நேரத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால் தான் சிறப்பாக அமையும். பறக்கும் படையில் உள்ள அலுவலர்கள் 8 மணி நேர பணியிலும் மிகுந்த கவனத்துடன் துரிதமாக செயல்படவேண்டும். எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவைகளை முழுமையாக கண்காணிக்கவேண்டும். உங்களது வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் நீங்கள் இருக்கும் இடத்தை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும். எனவே ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காமல் பல்வேறு இடங்களிலுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும். பணியின் போது மிகவும் சிரத்தையுடனும், சிறப்பாகவும் பணியாற்றவேண்டும். அலுவலர்கள் அனைவரும் தேர்தல் முடியும் வரை எந்த நேரத்தலும் பணியாற்ற தயார் நிலையில் இருக்கவேண்டும்’ என்றார்.  கூட்டத்தில், தூத்துக்குடி எஸ்.பி. முரளிரம்பா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் வீரப்பன், தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங்கலோன், பயிற்சி சப்-கலெக்டர் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்தும் வீடியோ பதிவு
விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் பொதுபார்வையாளர் மாதவி லதா பேசுகையில், முக்கிய வேட்பாளர்கள்  தேர்தல் பிரசாரத்தில் அவர்களின் செல்வாக்குமிக்க இடங்களில்  கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இரவு 10 மணியில் இருந்து காலை 6  மணிவரை ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி  பயன்படுத்தப்படுகிறதா? என்பதை  கண்காணிக்க வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும் போது அனைத்து காட்சிகளையும்  வீடியோ பதிவு செய்யவேண்டும். பணம் அல்லது பரிசுபொருட்கள் வாகன சோதனையில்  கண்டறியப்பட்டால் அந்த பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு  செய்யவேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் விலைமதிப்பு கூடியபொருட்கள்  இருந்தால் உடனடியாக தெரியப்படுத்தவேண்டும்’ என்றார்.

Tags : Direct Vehicle Officers ,
× RELATED சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி