×

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்தில் மீண்டும் புகுந்த சிறுத்தை

பென்னாகரம், மார்ச் 27: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்தில் மீண்டும் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியையொட்டி, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையம் உள்ளது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு இங்கு சிறுத்தை ஒன்று நுழைந்தது. இருட்டாக இருந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் நாய் என்று நினைத்து துரத்தியுள்ளனர். பின்னர் அது சிறுத்தை என்று தெரிந்ததும், பதறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ஒகேனக்கல் வனஅலுவலர் கேசவன் தலைமையிலான வனத்துறையினர், அங்கு விரைந்து சென்று சிறுத்தையை தேடினர். ஆனால் அங்கு சிறுத்தை இல்லை. அதை உயிருடன் பிடிக்க, வனத்துறையினர் நீரேற்று நிலையத்தில் வலைகளை கட்டி காத்திருந்தனர். ஆனால் சிறுத்தை சிக்க வில்லை. இதனால் சிறுத்தை இங்கிருந்து சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில் நேற்று ஒகேனக்கல் நீரேற்று நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள், மீண்டும் சிறுத்தையை கண்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் வனசரக அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, குடிநீர் சுத்திகரித்து வெளியேற்றப்படும் பெரிய அளவிலான குழாயில் சிறுத்தை நுழைந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து குழாயின் இரு பகுதிகளிலும் வலைகளை கட்டி இரும்பு கூண்டுகளில் இறைச்சியை வைத்து சிறுத்தையை பிடிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர், நீரேற்று நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.  

Tags : Hogenhurst Coach ,Hydroelectric Center ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா