×

திருச்சுழி பகுதியில் பராமரிப்பில்லா குடிநீர் தொட்டிகள் கசிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

திருச்சுழி, மார்ச் 27: திருச்சுழி பகுதி கிராமங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காத்தால், குழாய்களில் கசியும் நீர், கழிவுநீராக தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, நரிக்குடி பகுதியில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ரூ.பல லட்சம் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் தண்ணீரை மேலேற்றி, குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மிக மோசமாக உள்ளன. ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நிலைதொட்டிகளில் நீரேற்றும்போது, நீர் அழுத்தம் காரணமாக உடையும் குழாய்களை சீரமைப்பதில்லை. இதிலிருந்து கசியும் நீர் கழிவுநீராகி தேங்குகின்றன. மேல்நிலை தொட்டிகளை சுற்றிலும் கசிவுநீர் தேங்குகிறது. இதில், கால்நடைகள் புரண்டு அசுத்தப்படுத்துகின்றன. இது சேறும், சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

தொட்டிகளில் புழுக்கள் உருவாகி, குடிநீரில் கலக்கிறது. இதை குடிபோருக்கு சுகாதாரக்கேடு உருவாகிறது. தற்போது ஊராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறையால் குடிநீர் தொட்டிகள் உடனடியாக பராமரிக்கப்படுவதில்லை. மேலும், அதிகாரிகள் அனுமதி, புதிய குழாய் வாங்க நிதி என பல்வேறு நிலைகளை தாண்டி சீரமைக்க வேண்டியுள்ளது. பெரும்பாலன கிராமங்களில் மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் குழாய்களில் உடைந்து, கசியும் நீர் குளம்போல் தேங்குகிறது. இந்த நீரை கால்நடைகள் கிளறி சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. அந்த நீரையும் குடிப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் கிராமங்களில் உள்ள மேல்நிலைதொட்டிகளை முறையாக பராமரிப்பதில்லை. குழாய்களில் கசியும் நீர், கழிவுநீராக தொட்டியைச் சுற்றி தேங்குகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சில கிராமங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளைச் சுற்றி புதர்மண்டிக் கிடக்கிறது. எனவே, கிராமப்புறங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : area ,Tiruchirappalli ,leakage ,
× RELATED வாட்டி வதைக்கும்...