×

பண்ருட்டி அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் அதிரடி கைது

பண்ருட்டி, மார்ச் 27: பண்ருட்டி அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் அதிரடியாக பிடித்து கைது செய்தனர். கொள்ளையர்களிடமிருந்து 41 பவுன் நகைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தில் கடந்த 10ம் தேதி கலைச்செல்வி என்பவரது வீட்டின் பின்கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதலிருந்த 27 பவுன் நகைகள், ரூ.1.25 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த கலைச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதேபோல் பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் ராஜகுமாரி என்பவரது வீட்டில் கடந்த 21ம் தேதி 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். நேற்று முன்தினம் சொரத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நடந்து சென்ற ஒரு பெண்மணியிடம் மர்ம நபர்கள் செயினை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்ற சம்பவமும் நடந்ததையொட்டி அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர்.

இதுகுறித்து கலைச்செல்வி, ராஜகுமாரி உள்ளிட்ட 3 பேரும் முத்தாண்டிக்குப்பம் மற்றும் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முத்தாண்டிகுப்பம் போலீசார் மருங்கூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரில் சோதனை செய்த போது காரினுள் கத்தி, உளி, இரும்பு ராடு உள்ளிட்டவைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, காரில் இருந்த 2 பேரையும் பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் மாவட்டம் சின்னகள்ளிபட்டை சேர்ந்த சண்முகம் மகன் வேலன் (45), செஞ்சி அருகே மேலருங்குணம் மூர்த்தி மகன் சங்கர் (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், காட்டுக்கூடலூர், காட்டாண்டிகுப்பம், சொரத்தூர் ஆகிய இடங்களில் கொள்ளையடித்தது மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டதையும், இதுமட்டுமின்றி கடலூர் அருகே திருப்பாதிரிப்புலியூர் காவல் சரகத்துக்குட்பட்ட குறவன்பாளையத்தில் ஒரு வீட்டில் 6 பவுன் தங்க நகை, கொலுசு ஆகியவற்றை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 41 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : robbery ,Panrutti ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...