×

டிஎஸ்பி தலைமையில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக திடீர் வெளிநடப்பு

கூடுவாஞ்சேரி, மார்ச் 27: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காவல்துறை சார்பில், அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. வண்டலூர் டிஎஸ்பி வளவன் தலைமை தாங்கினார். ஏஎஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் தொடர்பாக அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கு போலீசார் அழைப்பு விடுத்தனர். அதன்படி, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.அந்தந்த பகுதிகளில் பலவீனமான வாக்காளர்கள் இருந்தால் தேர்தல் அலுவலர் அல்லது காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் பிரசாரம், பொது கூட்டம், ஊர்வலம் மற்றும் இதர அனுமதிக்கு தொகுதி தேர்தல் அலுவலரிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள் அல்லது விளையாட்டு மைதானத்தையோ அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு பயன்படுத்த கூடாது. பொது இடங்களில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது.

அச்சகத்தின் பெயர் முகவரி குறிப்பிடாமல் தேர்தல் சம்பந்தப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் நோட்டீஸ் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக் கூடாது என்பது உள்பட 30 விதிமுறைகளுடன் கூடிய கடிதத்தை அந்தந்த கட்சி பிரமுகர்களிடம் போலீசார் வழங்கினர்.இதைதொடர்ந்து, டிஎஸ்பி வளவன், அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், தேர்தல் விதிகள் குறித்து பேசி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அதிமுகவினர் கூட்டத்தை புறக்கணித்து பாதியிலேயே எழுந்து சென்றனர். ஆனால், திமுக உட்பட்ட மற்ற கட்சியினருடன் போலீசார் கலந்தாய்வு கூட்டத்தினை தொடர்ந்து நடத்தினர். அதிமுக பாதியிலேயே கிளப்பி சென்றதால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து கட்சி கூட்டத்தை பாதியிலேயே அதிமுகவினர் புறக்கணித்து வெளியேறினர். ஆனால், அக்கட்சியின் கூட்டணியில் உள்ள பாமகவினர் கடைசி வரை பங்கேற்றனர்.

Tags : AIADMK ,walkout ,party meeting ,DSP ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...