×

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி, மார்ச் 27: கும்மிடிப்பூண்டி அருகே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலையை மூடக்கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை திரும்ப ஒப்படைத்ததால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி  அடுத்த நாகராஜ் கண்டிகை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்பு அதிக நச்சுத்தன்மை வெளியிடும் இரும்பு உருக்காலை செயல்பட்டு வந்தது. அங்கிருந்து வெளியேற்றிய நச்சுதன்மை வாய்ந்த நீர், நிலத்தடி நீருடன் கலந்தது. இதனால் விவசாய பயிர்கள் கருகியது. நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்திய நாகராஜ் கண்டிகை, சித்தராஜ் கண்டிகை உள்ளிட்ட 5 கிராம மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலையை மூடவேண்டும் என பல்வேறு கட்ட போராட்டத்தை பொதுமக்கள் நடத்தினர். இதன் எதிரொலியாக தொழிற்சாலை மூடப்பட்டது.

பின்னர், இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே தொழிற்சாலை  பெயர் மட்டும் மாற்றி தொடங்கப்போவதாக தகவல் வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து  பொதுமக்களிடம் வட்டாட்சியர் சமரச வார்த்தை நடத்தினார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த தொழிற்சாலை இயங்கியது. இதை அறிந்த நாகராஜ் கண்டிகை கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை உடனே மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை  உள்ளிட்டவை திருப்ப ஒப்படைத்தனர்.

இதை அறிந்த சிப்காட் காவல் துறையினரும் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிராமமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தரப்பில், நிலத்தடிநீர் மற்றும் சுற்றுப்புற சூழலை மாசு படுத்தும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும். இதற்கான நடவடிக்கையை  எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம். வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்  என்றும் கூறினர். பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்ற வட்டாட்சியர் சுரேஷ்பாபு, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து  வட்டாட்சியர் தரப்பில் கூறுகையில், ‘ ஓரிரு நாட்களில் நிர்வாகத்தையும், பொது மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்மூலம் சுமூக முடிவு ஏற்படுத்தப்படும்’’ என கூறினார்.

Tags : Siege ,Vatican ,
× RELATED அரசு நிலத்தை மீட்ககோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை