×

தனியார் சுவர்களில் அனுமதி அவசியம் நாகர்கோவில் மாநகராட்சியில் சுவரொட்டிகள் ஒட்ட தடை அச்சகங்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில், மார்ச் 27: நாகர்கோவில் மாநகராட்சியில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி உள்பட மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. மரங்களில் ஆணி அடித்து விளம்பர போர்டுகள் அமைக்கப்படுவதுடன், மின்கம்பங்களிலும், விளம்பர போர்டுகள் மற்றும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களில் சுவரொட்டிகளால் அழகு கெடுவதுடன், காலை நேரங்களில் ஆபாச சுவரொட்டிகளும் ஒட்டப்படுகின்றன. மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதால், மரங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் பலமுறை புகார்கள் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை ேமற்கொள்ளவில்லை. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்படி பொது இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. விளம்பரங்களும் அழிக்கப்பட்டன.

இந்நிலையில்,  தமிழக அரசின் பொது இடங்கள் அழகை சீர்கெடுத்தல் சட்டம் 1959ப்படி, மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்துள்ளார். மீறி ஒட்டினால், ஒட்டியவர்கள், விளம்பரம் நிறுவனம், அமைப்பு நிர்வாகிகள் அல்லது தனிநபர்கள் மீதும், அச்சக உரிமையாளர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, சுவரொட்டி இல்லாத மாநகரமாக நாகர்கோவில் மாறும். மாநகரை அழகாகவும், தூய்மையாகவும் வைக்க மக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனியார் சுவர்களில் விளம்பரம் மற்றும் சுவரொட்டி ஒட்ட, அதன் உரிமையாளர்களிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு இல்லாவிட்டால், தனியார் சுவர்களில் விளம்பரம் செய்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : corporation ,Nagarco ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு